×

செய்துங்கநல்லூரில் சாலையை ஆக்கிரமிக்கும் வாரச்சந்தை கடைகள் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

செய்துங்கநல்லூர், செப். 7: செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் சாலையை ஆக்கிரமிக்கும் வாரச்சந்தை கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தங்களது பொருட்களை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருகின்றனர். காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் மட்டுமின்றி பல்வேறு பொருட்களும் இங்கு கிடைப்பதால் சந்தைக்கு சுற்றுப்பகுதி கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

செய்துங்கநல்லூர் வாரச்சந்தை வளாகத்திற்குள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டுமென விதி உள்ளது. ஆனால் இதனை மீறி வியாபாரிகள், திருச்செந்தூர் – திருநெல்வேலி மெயின் ரோட்டின் சாலையோரத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இதன் காரணமாக மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சந்தைக்கு வரும் பொதுமக்களும், தங்களது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் சாலை குறுகலாகி பேருந்து ஓட்டுநர்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.இப்பிரச்னை தொடர்பான பல்வேறு புகார்களை அடுத்து இரவு 10 மணி வரை இயங்கிய வாரச்சந்தையின் நேரத்தை காலை 5 மணி முதல் மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சந்தை மற்றும் சந்தை சுற்றியுள்ள பகுதியில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது வரை இந்நேர கட்டுப்பாடுகளை வியாபாரிகளும், சந்தை நிர்வாகமும் கடைபிடிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் பீக் அவரில் திருச்செந்தூர் – நெல்லை மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இனி வரும் காலங்களிலாவது வாரச்சந்தையின் நேர கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும், சாலையில் கடைகள் வைப்பதை தடுக்கவும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செய்துங்கநல்லூரில் சாலையை ஆக்கிரமிக்கும் வாரச்சந்தை கடைகள் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Karadanganallur ,Dinakaran ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...