
சேலம், செப்.7: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள ெபருமாள், கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் அவதரித்தவர் கிருஷ்ணன். மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் 9வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். நம் வீட்டிலும் கிருஷ்ணரின் பாதங்கள் பட வேண்டும் என்பதற்காகவே கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கிருஷ்ணன், பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும். நடப்பாண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவையொட்டி பல வீடுகளில் கிருஷ்ணன், ராதை சிலை வைத்து பஜனை பாடி சிறப்பு பூஜை செய்தனர். வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டு பாதத்தில் அரிசிமாவை தடவி வீட்டின் வாசற்படியில் இருந்து உள்ளே சாமி பூஜை அறை வரை நடக்க வைத்தனர்.சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வேணுகோபால், பாமா, ருக்மணி தாயாருடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாள், தாயார் அருளை பெற்றனர்.
இதேபோல் சேலம் பட்டைகோயில் வரதராஜ பெருமாள், சிங்கமெத்தை செந்திரராஜ பெருமாள், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர், பிரசன்னா வெங்கடேச பெருமாள், ஆனந்தா இறக்கம் லட்சுமி நாராயண சுவாமி, சின்னதிருப்பதி வரதராஜபெருமாள், காருவள்ளி சின்னதிருப்பதி பெருமாள், நாமமலை பெருமாள், உடையாப்பட்டி பெருமாள், குரங்குச்சாவடி கூசமலை பெருமாள், நெத்திமேடு கரியபெருமாள், கடைவீதி வேணுகோபால் சுவாமி, பொன்னம்மாப்பேட்டை குருவாயூரப்பன் கோயில் உள்பட சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள், கிருஷ்ணன், குருவாயூரப்பன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடந்தது.
The post கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் appeared first on Dinakaran.