×

மாஜி ஒன்றிய அமைச்சருக்கு சீட் கிடைக்காது என்று கொண்டாடும் தாமரை நிர்வாகி பற்றி செல்கிறார்: wiki யானந்தா

‘‘யாரை நம்பினால் வங்கி கணக்கில் கரன்சி இல்லாமல் ‘பூஜ்ஜியத்தை’ காட்டும்னு பேசிக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பொலிட்டிக்கல் ரீதியில் சேலம்காரருக்கு ‘டப்’ பைட் கொடுத்தாலும் தேனிக்காரர் மனதளவில் ரொம்பவே நொடிஞ்சிபோய் இருக்காராம். தாமரை கட்சிக்காரங்களும் இவரை நம்பினால் எலக்‌ஷனில் பூஜ்ஜிய வெற்றிதான் கிட்டும் என்பதால், தேனிகாரரை கழட்டிவிட்டுட்டாங்களாம். இந்நேரத்தில்தான் ஒரு திட்டத்தை கொண்டுவந்தாராம் பலாப்பழத்து ஊரை சேர்ந்தவர். புரட்சிப் பயணமுன்னு பேரை வச்சி பதினைஞ்சு நாளுக்கு ஒரு கூட்டம் என மாவட்டத்துக்கு ஒரு கூட்டத்தை கூட்டுவோமுன்னு சொன்னாராம். இவ்வாறு கூட்டத்தை போட்டால் கைவிட்ட தாமரை கட்சியின் தலைமை நம்மை உத்து கவனிக்கும். அவர்களின் கண்ணசைவு நம்மீது படும்வரை நாம கூட்டத்தை கூட்டிகிட்டே இருக்ணும்… அது நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரணும்னு கொளுத்தி ேபாட்டாங்களாம். இந்த பார்முலாவை தேனிக்காரர் அரைமனதோடு ஏத்துக்கிட்டாராம். ஆனா முதல் கூட்டமே புஸ்சாகி போச்சாம். உங்களது கூட்டம் மழைக்கே பொறுக்கலைன்னு சேலத்துக்காரரின் ஆதரவாளர்கள் ஏகாடியம் பேச… தேனிகாரரின் ஆதரவாளர்களோ… வருணபகவான் எங்களை முதல் கூட்டத்திலே வாழ்த்த தான் வந்தார்னு மகிழ்ச்சியோடு சொல்றாங்களாம். இயற்கையாக பெய்த மழையும் அரசியல் பிடியில் இருந்து தப்பாது என்பது தேனி, சேலம் தலைவர்களின் பேச்சில் வெளிப்பட்டது. அதே நேரத்துல இந்த புரட்சி பயணம் நிர்வாகிகளை ஆண்டியாக்கப் போடும் திட்டமுன்னு தேனிக்காரரின் ஆதரவாளர்கள் சொல்றாங்க. சம்பாதித்தவர்கள் எல்லாம் சேலத்துக்காரர் கையில் இருக்காங்க. சேலம்காரர் கட்சி நிகழ்ச்சி என்றால் அள்ளிக்கொடுக்குறாரு… எங்கள் தலைவரோ கிள்ளி தான் தராறு… அவர் கரன்சியை வெளியே எடுப்பதே இல்லையாம். இதே நிலை நீடித்தால் தேர்தல் வருவதற்குள் நிர்வாகிகளின் பேங்க் பேலன்சும் ‘பூஜ்ஜியத்தை’ காட்டும் என்பதால் மழைக்கு ஒதுங்குவதை போல, தேனிகாரரின் நிகழ்ச்சி என்றால் ஒதுங்க நினைக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை கட்சியில் மாஜி ஒன்றிய அமைச்சருக்கு ‘சீட்’ கிடைக்காது என்று யார் சந்தோஷத்தில் மிதக்கிறா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தாமரை கட்சி சார்பில் போட்டியிட புதியதாக ஒருவர் சபரிமலை சாமி பெயரில் உருவெடுத்துள்ளாராம். திடீரென்று அரசியல் களத்தில் புகுந்து தலைவர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்து அதனை வெளியிட்டு அதகளம் செய்து வருகிறாராம். அவர்தான் அடுத்து கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விரும்பி காய்களை நகர்த்தி வருகிறாராம். அதற்கு அவர் சொல்லும் காரணம். மாஜி ‘கோல்’ அமைச்சருக்கு இந்தி தெரியுமா… எனக்கு நன்றாக இந்தி தெரியும். அதுதான் என் பிளஸ் பாயின்ட். மாநிலத்தில் அரசியல் தலைமை மாறி உள்ளது. இனிமேல் கன்னியாகுமரியில மாஜி ‘கோல்ட்’ அமைச்சருக்கு இனிமேல் இறங்கு முகம்தான். அவருக்கு இனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காது. அதனால, நான் எனது அரசியலை டெல்லியை நோக்கி மாறிவிட்டேன். வரும் நாடாளுமன்ற ேதர்தலில் எனக்கு ‘சீட்’ ஓகே ஆகிவிடும். தமிழ்நாட்டின் புது தாமரை தலைமை கண்டிப்பாக எனக்கு சீட் தரும், நான்தான் வேட்பாளர் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி சிரிக்கிறாராம். காரணம், அண்மையில் மவுன்ட் தலைவர் குமரி மாவட்டம் வந்தபோது அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளித்து அசத்தினாராம். அந்த அசட்டு தைரியத்தில்தான் அவர் இந்த ஸ்டேட்மென்ட்டை தனக்கு வேண்டியவர்களிடம் சிரித்தபடி கூறி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில நடக்கும் விஷயங்கள் அரசியல் ரீதியாக பலருக்கும் கண்ணை கட்டி காட்டில் விட்டபடி இருக்காமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘புதுச்சேரி அரசின் சட்ட அதிகாரியாக மராட்டிய ராணியின் பெயரை கொண்டவர் நீண்டகாலமாக உள்ளாராம். இவர் ஏற்கனவே புதுச்சேரி அரசில் பணியாற்றி மறைந்துபோன ஜாம்பவான் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பினாமினு பேசிக்கிறாங்க. அரசு அதிகாரிகள் சொத்து வாங்கினால், சம்மந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது விதியாம். ஆனால், இவர் தன்னிடம் இருக்கும் ஏகப்பட்ட பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திருதிருவென முழிக்கிறாராம். அதோடு புதுச்சேரியில் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் பல அடுக்கு கொண்ட கெஸ்ட் அவுஸ், வில்லியனூரில் 4 பிளாட், புதுச்சேரி எல்லையையொட்டி இருக்கும் இடத்தில் ஏகப்பட்ட மனைகள் என வாங்கி இருக்கிறாராம். பத்திரப்பதிவின் நகலோடு, ஆதரமாய் புகார் கொடுத்தும் புதுச்சேரியின் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லையாம். சாதாரணமாக மொட்டை பெட்டிஷன் போட்டாலே விசாரணை என நோண்டி, நொங்கெடுக்கும் தலைமை செயலர், அந்த வீரமங்கை பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டாராம். அதிகாரிகள் முதல் ஆட்சியில் இருக்கும் புல்லட்சாமி வரை எல்லோருக்கும் அவர் மீது எப்போதும் தனி கரிசனம்தானாம். சட்ட அதிகாரி என்பதால், எல்லோர் குடுமியும் அவர் கையில் என்பதால், அதிகாரிகள் மத்தியில் கெத்து காட்டுகிறாராம். தலைமை செயலரிடம் புகார் கொடுத்தால் குப்பைத்தொட்டிக்கு சென்று விடுகிறதாம். இதனால், நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கீழ்நிலை அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை புகாரை தட்டிவிட்டு… நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்களாம். இது போன்ற பல்வேறு புகார் இருந்தும், அடுத்த கட்டமாக சார்பு செயலர் பதவிக்கு நியமனம் செய்து பவர்புல் பெண்மணி இசைக்கு கோப்பு அனுப்பப்பட்டு இருக்காங்களாம். அந்த கோப்பும் பெண்டிங்கில் இருக்காம். எல்லாம் பவர்புல் பெண்மணியின் கண்ணசைவில் மராட்டிய ராணியின் ஆட்டம் அதிகரித்து இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘குழந்தைங்க, பெரியவங்க குடிக்கிற மில்க்கில் மிக்ஸ் செய்தவங்களை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டம் கோணம் பாதியான ஊர் மற்றும் சோ லிங்கர்ல இருந்து மில்க் காஞ்சி மாவட்டத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்குறாங்க. இந்த மில்க்குல மிக்சிங் நடப்பதாக விஜிலென்ஸ்சுக்கு புகார் போயிருக்குது. சில நாளுக்கு முன்னாடி மாவட்ட எல்லையில இருக்குற சோ லிங்கர் பக்கத்துல புரம் என்று முடியுற கிராமத்துல விவசாயி கிட்ட இருந்து மில்க் வாங்கி அனுப்புற ஏஜென்ட் கிட்ட சோதனை செஞ்சாங்க. அதுல, அரசு நிறுவனத்துக்கு அனுப்புற மில்க்குல வெண்ணைய மட்டும் உருவிட்டு, அதுல பவுடர் கலக்கி அனுப்புற தில்லாலங்கடி வேலை வெளிச்சத்துக்கு வந்துடுச்சாம். அதுமட்டுமில்லாம, அந்த வீட்டுல கிலோ கணக்கில வெண்ணை, மில்க் பவுடர்னு பதுக்கி வெச்சதும் தெரியவந்துச்சு. இதுல, தயாள ஏஜென்ட்டோட சன், மில்க் ஒன்றியத்தோட ஆபிசரின் கார் டிரைவராக வேலை செய்றாராம். இந்த மில்க் மிக்சிங் மேட்டர்ல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்குதான்னு விஜிலென்சுக்கு சந்தேகம் வந்து விசாரணைய தொடங்கியிருக்காங்களாம். இதனால இந்த டிபார்ட்மெண்ட்டே ஆடிப்போயிருக்குதாம். இந்த மேட்டர் தான் காஞ்சி ெதாடங்கி குயின்பேட்டை, வெயிலூர்னு பரபரப்பா பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாஜி ஒன்றிய அமைச்சருக்கு சீட் கிடைக்காது என்று கொண்டாடும் தாமரை நிர்வாகி பற்றி செல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus ,Uncle ,Peter ,Union ,wiki ,Yananda ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...