×

பெரம்பலூர் அருகே சோகம் கழுத்தில் டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் சாவு

குன்னம்: பெரம்பலூர் அருகே கழுத்தில் டாட்டூ குத்திக் கொண்ட கல்லூரி மாணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தனுஷ்கோடி பழனிச்சாமி தம்பதி. இவர்களது மகன் பரத் (22). இவர் அரியலூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற பரத் அங்கு கடை வீதியில் பச்சை குத்தும் மையத்திற்கு சென்று கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூ குத்திக் கொண்டார்.

இந்நிலையில் வீடு திரும்பிய பரத் வயல்வெளியில் விவசாய வேலை செய்து வந்தார். இதையடுத்து அவருக்கு டாட்டூ குத்திய பகுதியில் புண் ஏற்பட்டது. இதில் நரம்பு பாதிக்கப்பட்டு கட்டி உருவாகி கடும் வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு வந்த பரத், மருந்து வாங்குவதற்காக அரியலூருக்கு சென்றார். அங்கு அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும், இதனால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இவரது தற்போதைய உடல்நிலை சிகிச்சையை ஏற்காது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த மருத்துவமனையிலேயே பரத் உயிரிழந்தார். இச்சம்பவம் மூங்கில் பாடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பரத்துடன் சென்று டாட்டூ குத்திக்கொண்ட அவரது மற்ற நண்பர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெரம்பலூர் அருகே சோகம் கழுத்தில் டாட்டூ குத்திய கல்லூரி மாணவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Sawu ,Perambalur Gunnam ,Perambalur ,Perambalur District ,Kunnam ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு