×

ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட விதிகள்படி தேர்தல் நடத்த தயார்: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

போபால்: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் சட்ட விதிகளின்படி தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு 8 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது. எனவே 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுடன் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடக்கலாம் என்று தகவல் பரவி உள்ளன.

மேலும் அடுத்த ஆண்டு இறுதிவரை தேர்தல் நடத்த வேண்டிய மாநிலங்களையும் இந்த பட்டியலில் இணைத்து மொத்தம் 12 மாநிலங்களுடன் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மத்தியபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவது குறித்தும், அதற்கு செய்துள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய குழு நேற்று போபால் சென்றுள்ளது. அங்கு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசு நிர்வாக அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் குழுவினர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிந்த பிறகு நடந்த செய்தியாளர்கள்

சந்திப்பில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராஜீவ்குமார் அளித்த பதில் வருமாறு: ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த அரசியல் சாசன சட்ட விதிகளின்படி செயல்பட தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. அரசியலமைப்பு விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின்படி இந்த விஷயத்தில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்படும். தேர்தலை உரிய பதவிக்காலத்திற்கு முன்பு தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். இதுதான் விதி. இந்த சட்ட விதிகளின்படி, புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெறும் நாளிலிருந்து 5 ஆண்டுகள் பதவிக்காலம் ஆகும்.

இந்த காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் பொதுத் தேர்தலை அறிவிக்கலாம். சட்டசபை தேர்தலிலும் இதே விதிமுறைகள் உள்ளன. எனவே சட்டவிதிகளுக்கு உட்பட்டு தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு நடைமுறைப்படுத்துவதில் ஹேக்கிங் பிரச்னை உள்ளது. மேலும் நம்பிக்கை சிக்கல்கள் உள்ளதால், அதை அமல்படுத்துவதில் பிரச்னைகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்பம் ஒரு பிரச்சினை அல்ல. தற்போதைய செயல்முறை நெட்வொர்க்குடன் இணைக்கப்படவில்லை. எனவே மின்னணு வாக்குப்பதிவு பற்றிய விவாதம் நடந்து வருகிறது. இதை அமல்படுத்த சிறிது காலம் ஆகும்.

மக்களவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 5ம் தேதி வெளியிடப்படும். புதிய தகுதியுள்ள வாக்காளர்கள் தங்கள் தரவுகளில் ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டறிந்தால், அவற்றைச் சரிசெய்துகொள்ள விண்ணப்பிக்க வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி தேர்தல் ஆணையம் விழிப்புடன் உள்ளது. எனவே சந்தேகத்திற்கிடமான மற்றும் மொத்த பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரிக்கவும் நிதி நிறுவனங்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்தால், வரவிருக்கும் தேர்தலில் தங்கள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் முறையை தேர்தல் கமிஷன் அமல்படுத்தி உள்ளது. அத்தகைய வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஆன்லைன் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்தல் அதிகாரிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று, ரகசியமாக வாக்களிப்பதை உறுதி செய்வதோடு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வீடியோ படம் எடுப்பார்கள். மேலும் வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்கவும், பெண்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் பழங்குடியின குழுக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் கட்சிகளால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் தற்போதைய செலவுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. சட்ட விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை ஒரு வேட்பாளர் தங்கள் செலவினங்கள் குறித்த தகவலை வைத்திருக்க வேண்டும். அதே சமயம் அரசியல் கட்சிகள் தாங்கள் இலவசங்களைப் வழங்குவதைப் பற்றி வாக்காளர்களுக்குத் தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு, அதற்கான செலவினங்கள் மற்றும் நிதி ஏற்பாடு ஆகியவற்றை அவர்கள் குறிப்பிட வேண்டும். தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விரிவான அறிக்கையை அளித்துள்ளது. ஆனால் தேர்தல்களில் இலவசங்கள் விவகாரம் பற்றி உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருகிறது. மேலும் சிறையில் உள்ள கைதிகளுக்கு சட்டப்படி வாக்களிக்க அனுமதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* ராம்நாத் கோவிந்த்துடன் அமித்ஷா, மேக்வால் 1 மணி நேரம் ஆலோசனை
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் நேற்று ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசினார்கள். இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. குழு அமைக்கப்பட்ட பிறகு அமித்ஷா மற்றும் மேக்வால் ஆகியோர் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர். இதுபற்றி கேட்ட போது மரியாதைநிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் நடத்தும் இடம் மற்றும் தேதி குறித்து பேசி முடிவு எடுத்துள்ளதாகவும், மற்றகூட்டங்கள் ஆன்லைன் முறையில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்ட விதிகள்படி தேர்தல் நடத்த தயார்: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Bhopal ,Rajivkumar ,
× RELATED உத்தரகாசியில் சுரங்கப்பாதையில்...