×

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதத்தில் மாற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை, 4 மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனம் மட மேலாளர் சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு ஆடி விதியில் உள்ள திருஞான சம்பந்தர் மண்டபத்தில் ஆதீனத்தின் சார்பாக பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது. ஆனி மாத உற்சவத்தின் 6ம் நாள் மண்டகப்படி இம் மண்டபத்தில் இருந்தே சுவாமி, அம்மன் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும்.

அப்போது திருஞான சம்பந்தர் நடத்திய அதிசயம் குறித்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வரலாறு எடுத்து கூறப்படும் நிகழ்வும் நடந்தது. 291வது ஆதீனம் இருந்தவரை இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால், 292வது ஆதீனம் காலத்தில் இவை நடக்கவில்லை. தற்போது இந்த இடத்தில் கோயில் சார்பில் லட்டு தயாரிக்கப்படுகிறது. இந்த இடத்தில் மீண்டும் தேவார பாடசாலை மற்றும் 6ம் மண்டகப்படியை நடத்திட வசதியாக லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது. கோயில் வக்கீல் வி.ஆர்.சண்முகநாதன் ஆஜராகி, ‘‘அங்கு எவ்வித தேவார வகுப்பும் நடக்கவில்லை. திருக்கல்யாண மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பயன்பாடின்றி இருந்ததால் அந்த இடத்தில் பக்தர்களுக்கான லட்டு பிரசாதம் தயாரிக்கப்படுகிறது’’ என்றார். மனுதாரர் வக்கீல் அருண்சுவாமிநாதன் திருஞானசம்பந்தர் மண்டபம் இருந்தது தொடர்பான குறிப்புகளை தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதி, சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் முக்கியமானவர். இக்கால கட்டத்தில் அனைவரும் தேவாரம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, தற்போதுள்ள லட்டு தயாரிக்கும் பகுதியை 4 மாதத்தில் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இந்த இடத்தில் மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதத்தில் மாற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshiyamman temple ,ICourt ,Madurai ,Meenakshiyamman ,Madurai… ,
× RELATED முறைகேட்டை கண்டுபிடித்த லஞ்ச...