×

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: டிரைவர், இளம்பெண் படுகாயத்துடன் மீட்பு

சங்ககிரி: சங்ககிரி அருகே, நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகினர். சேலம் அருகே கொண்டலாம்பட்டி காமராஜர் காலனி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜதுரை (28). சேலம் மாநகராட்சி தற்காலிக டிரைவர். இவரது மனைவி பிரியா (25). ஒரு வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை இருந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் சண்டை நடந்தது, இது குறித்து, ராஜதுரை மாமியார் வீட்டிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சமரசம் பேசுவதற்காக நேற்று முன்தினம் இரவு, பிரியாவின் தந்தை பழனிசாமி(52), தாய் பாப்பாத்தி(48), தாய்மாமன் ஆறுமுகம்(42), அவரது மனைவி மஞ்சுளா(38), மகன் விக்னேஷ்(20), உறவினர் செல்வராஜ்(45) ஆகியோர், ஆம்னி வேனில் பெருந்துறையில் இருந்து புறப்பட்டனர். நேற்று அதிகாலை 1.30 மணியளவில், கொண்டலாம்பட்டியில் உள்ள ராஜதுரை வீட்டிற்கு சென்ற அவர்கள், மகள் மற்றும் மருமகனை சமாதானம் செய்துள்ளனர்.
அப்போது, ஒரு வாரம் பெற்றொர் வீட்டில் தங்கி விட்டு வருவதாக கூறி, பிரியா மகள் சஞ்சனாவுடன் அதிகாலை 2 மணியளவில் புறப்பட்டனர். வேனை விக்னேஷ் ஓட்டினார்.

அதிகாலை 2.30 மணியளவில், சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாக்கவுண்டனூர் பைபாசில் வந்த போது, சாலையின் இடதுபுறமாக பார்க்கிங் லைட் போடாமல் நிறுத்தியிருந்த லாரியின் மீது வேன் பயங்கரமாக மோதி அப்பளம்போல் நொறுங்கியது. உடனடியாக டிரைவர் லாரியை எடுத்துக் கொண்டு கோவை நோக்கி சென்று விட்டார். காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை அப்பகுதியினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் குழந்தை சஞ்சனா, பழனிசாமி, பாப்பாத்தி, ஆறுமுகம், மஞ்சுளா, செல்வராஜ் ஆகியோர் இறந்து விட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த விக்னேஷ், பிரியா ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: டிரைவர், இளம்பெண் படுகாயத்துடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,Sangakiri.… ,Dinakaran ,
× RELATED காரை நிறுத்தி பெண்ணிடம் குறை கேட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்