×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள், கூலிப்படைகளை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் ஆலோசனை: உயரதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்தது மற்றும் காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பது ரவுடிகளை ஒழிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஏடிஜிபி அருண் தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் எஸ்.பி. மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னை, பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசன் (32). பிரபல ரவுடியான இவர், நேற்று முன்தினம் மாலை ஆட்டோவில் தண்டலம்- பேரம்பாக்கம் சாலை வழியாக மேவளூர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மண்ணூர் அருகே எதிர் திசையில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், எபினேசன் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்துவிட்டு அதே காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் ரவுடி எபினேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து தெரியவந்துள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு ராஜேஷின் கூட்டாளியான ஸ்டீபன் என்பவரை அரிவாளால் தலையை வெட்டி சிதைத்து, எபினேசன் கொலை செய்துள்ளார். இதையடுத்து எபினேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால் எப்படியாவது எபினேசனை கொலை செய்ய வேண்டும் என்று ராஜேஷ் திட்டம் தீட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த எபினேசன் திருமழிசை, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள ரவுடிகளுடன் சேர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் இருக்கும் ராஜேஷ் தன் நண்பன் கொலையில், பின்னணியில் எபினேசன் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கூலிப்படையினர் தினமும் எபினேசனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனியாக வந்த எபினேசனை கொலை செய்துவிட்டு தாங்கள் வந்த காரில் கூலிப்படை கும்பல் சாவகாசமாக தப்பிச் சென்றது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் குற்றங்களை தடுக்கவும், ரவுடிகளை வேட்டையாடுவது தொடர்பாக சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெரும்புதூர் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.இதில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜி பொன்னி, காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர், ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி சந்திரதாசன், ஏடிஎஸ்பி வெள்ளதுரை மற்றும் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருடன், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ரவுடிகளை வேட்டையாடுவது , குற்றச்செயல்களை தடுப்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தபட்டுள்ளது.

* ‘குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்’
இது குறித்து காஞ்சிபுரம் எஸ்பி. சுதாகரிடம் கேட்டபோது, ஸ்ரீபெரும்புதூரில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. குற்றங்களை தடுக்க ஏடிஜிபி சில ஆலோசனைகள் கொடுத்துள்ளார். ரவுடிகளை ஒழிக்க என்கவுன்டர் நடத்தும் திட்டம் எதுவுமில்லை. இது வழக்கமான ஆலோசனை கூட்டம்தான். எபினேசன் கொலையில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள், கூலிப்படைகளை முற்றிலும் ஒழிக்க அதிகாரிகளுடன் ஏடிஜிபி அருண் ஆலோசனை: உயரதிகாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : ADGP Arun ,Kanchipuram ,CHENNAI ,Sriperumbudur ,Kanchipuram district ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...