×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு


மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடத்தை 4 மாதத்திற்குள் மாற்ற வேண்டும். அந்த இடத்தில் ஆதீனம் பாடசாலை நடத்த அனுமதிக்க வேண்டும். என ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. மதுரை ஆதீனம் சார்பில், அதன் மேலாளர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு ஆடி வீதியில் திருஞானசம்பந்தர் மண்டபம் உள்ளது. இதில் ஆதீனம் மடம் சார்பில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தது. ஆனி மாத திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியில், இம்மண்டபத்தில் இருந்தே சுவாமி, அம்மன் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அப்போது திருஞானசம்பந்தர் மதுரையில் நடத்திய அதிசயம் குறித்த வரலாறு மக்களுக்கும், பக்தர்களுக்கும் கூறப்படும் நிகழ்வு நடைபெற்று வந்தது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் 292வது அருணகிரிநாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இடம் கடந்த சில ஆண்டுகளாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் தாயாரிக்கும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது. தற்போது 293வது மதுரை ஆதீனமாக பொறுப்பேற்று இருக்கும் ஞானசம்பந்த தேசிகர் தேவார பாடசாலை, 6ம் மண்டகப்படியை மேற்படி திருஞானசம்பந்தர் மண்டபத்தில் மீண்டும் நடத்த வசதியாக, தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி மதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கோயில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த மண்டபத்தில் மனுதாரர் கூறுவது போல எவ்வித தேவார வகுப்பும் நடைபெறவில்லை. எனவே, தற்போது இந்த இடத்தில் பக்தர்களுக்கு லட்டு தயாரித்து பிரசாதமாக வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், ‘லட்டு தயாரிக்கும் இடத்தில் திருஞானசம்பந்தர் மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகளை அறிக்கையாக தாக்கல் செய்தார். மேலும், இது தொடர்பாக 1939, 1963, 1985ம் ஆண்டின் திருக்கோயில் வரலாறு, மீனாட்சி கோயில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து நீதிபதி கூறுகையில், ‘சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் மிகவும் முக்கியமானவர். இக்கால கட்டத்தில் அனைவரும் தேவராம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, கோயில் நிர்வாகம் லட்டு தயாரிக்கும் இடத்தை 4 மாதத்திற்குள் வேறுஇடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இந்த இடத்தை மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும். வழக்கம்போல மாசி திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியை, அதே மண்டபத்தில் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் இடத்தை மாற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Meenatchi ,Latu ,Amman ,Temple ,Madurai ,Madurai Meenatsiyamman Temple ,Adenam ,Madurai Meenati Amman Temple ,Ikort ,
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்