×

புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் சேதமடைந்து ‘தொங்கும்’ தொங்கு பாலம்: சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை


பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் சேதமடைந்து ‘தொங்கும்’ தொங்கு பாலத்தை சீரமைக்க வேண்டும் என மலைவாழ் விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் தாண்டிக்குடி, பெரும்பாறை, பில்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் அதனை சுற்றி பல மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெய்யும் மழைநீர் அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு வந்து சேர்கிறது. சிறிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

இந்த நீர்வீழ்ச்சிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வருகின்றனர். இந்த அருவிக்கு தண்ணீர் வரும் ஆற்றை கடந்து செல்வதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் சுமார் 100 அடி தூரத்திற்கு இரண்டு கரைகளையும் இணைக்கும் வகையில் இரும்பு ரோப்பு கைப்பிடிகளுடன், அழகிய வடிவமைப்புடன் மரத்தாலான தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. இந்த தொங்குபாலத்தில் சுற்றியுள்ள இயற்கை அழகை ரசித்தபடி சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்வர். இதில் நடந்து செல்வதே வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இந்நிலையில், போதிய பாராமரிப்பில்லாத காரணத்தால் தொங்கு பாலத்தின் இரும்பு ரோம்புகள் மற்றும் நடைபாதை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலத்தை பழமை மாறாமல் சீரமைத்து, அதனை பாதுகாக்க வேண்டும் என மலைவாழ் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புல்லாவெளி நீர்வீழ்ச்சி பகுதியில் சேதமடைந்து ‘தொங்கும்’ தொங்கு பாலம்: சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bullaveli Falls ,Pattiveeranpatti ,Perumparai Pullaveli waterfall ,Pullaveli ,Dinakaran ,
× RELATED பட்டிவீரன்பட்டி பகுதியில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்