×

ரூ.60க்கு மீன்குழம்பு காம்போ… ரூ.70க்கு கறிக்குழம்பு காம்போ…

 


நம்பிக்கை விதைக்கும் சுமதி அக்கா!

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள ஜெயின் கோயில் அருகில் இருக்கிறது சுமதி அக்கா கடை. அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு சுமதி அக்கா கடையை தெரியாமல் இருக்க முடியாது.அந்தளவு நாவை சுண்டி இழுக்கும் சுவையில், தரமான உணவை வழங்கி வருகிறார் திருநங்கையான சுமதி. கடந்த நான்கு ஆண்டுகளாக, வெற்றிகரமாக உணவகத்தை நடத்தி வரும் சுமதி அக்கா, தான் கடந்து வந்த பாதையை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
“நான் பிறக்கும்போதே நார்மல் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருந்தாலும், ஆணாகவேதான் வளர்ந்தேன். பத்தாவது வரை படித்திருக்கிறேன். பள்ளியில் உடன்படித்த சக நண்பர்கள் எல்லாரும் என்னுடைய நடை, பாவனைகளைப் பார்த்து கேலி செய்ததால், அதற்குமேல், பள்ளிக்கு போக பிடிக்காமல் நின்றுவிட்டேன். அதன்பின், வங்கி ஒன்றில் ஆபீஸ் பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். 28 வயது வரை வங்கிப் பணியில்தான் இருந்தேன். இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டுக்கு அருகில் டிபன் கடை போட்டு நடத்தி வந்தேன்.

இந்நிலையில், ஆணாகவும் இல்லாமல், பெண்ணாகவும் இல்லாமல், இருந்த என்னுடைய உருவம், செயல்களைப் பார்த்து, வங்கி மேலாளர், இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. முடியெல்லாம் வெட்டிகிட்டு நீட்டா வாங்கன்னு சொல்லிட்டாரு. அதற்குமேல் அந்தப் பணியை என்னால் தொடர முடியாமல் போனது. அதுவரை, எனக்குள் பெண்தன்மை இருந்தாலும், அறுவை சிகிச்சை செய்துகொண்டு முழுப்பெண்ணாக மாற ஒரு பயம், தயக்கம் இருந்ததால் ஆணாகவே இருந்தேன். இந்நிலையில், வேலை போனபிறகு, எல்லா தயக்கத்தையும் உடைத்துக் கொண்டு, அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாகவே மாறிவிட்டேன். அதன்பின்னர், வாரம் ஒருநாள் போட்டுக் கொண்டிருந்த டிபன் கடையை தினசரி ஆக்கிக் கொண்டேன். அதிலும், ஒரு சிக்கல் எழுந்தது. இரவில் கடை நடத்தக்கூடாது. வேண்டும் என்றால் பகல் நேரத்தில் நடத்திக் கொள்ளுங்கள் என்று சிலர் சொன்னார்கள். இந்த சூழலில், சூளை பகுதியில் உள்ள திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக இயங்கும் சகோதரன் அமைப்பினர் எனக்கு தள்ளுவண்டியை வழங்கினர். அதைவைத்து, பகல் நேர உணவகக் கடையை தொடங்கினேன்.

ஒரு ஆணாக இருந்து நான் கடையை நடத்தியபோது சந்தித்த சிக்கல்களை விட இப்போது, சிக்கல்கள் குறைவாகவே உள்ளது. தற்போது நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டேன். கடின உழைப்பும், தரமும் இருந்தால், உணவகத் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன். எங்களது கடையில் சைவம், அசைவம் இரண்டும் இருக்கும். மதிய சாப்பாட்டில் இரண்டு விதமான காம்போ வைத்திருக்கிறோம். அதில் மீன் குழம்பு சாப்பாடு காம்போ 60 ரூபாய்க்கும், கறிக் குழம்பு சாப்பாடு 70 ரூபாய்க்கும் வழங்குகிறோம். இவை அன்லிமிட்தான். 60 ரூபாய் காம்போவில் சாதம், சாம்பார், ரசம், மீன்குழம்பு, மீன் வறுவல் இருக்கும். 70 ரூபாய் காம்போவில், சாதம், சாம்பார், ரசம், கறிக்குழம்பு, மீன் குழம்பு அல்லது மீன் வறுவல் இருக்கும். இதைத்தவிர, கைமா ஃப்ரை, மீன் ஃப்ரை, சிக்கன்தொக்கு, இறால் தொக்கு, முட்டை வறுவல் இருக்கும். எங்களது கடையின் ஸ்பெஷல் என்றால், கைமா ஃப்ரைதான். அதுதான் அதிகளவு வியாபாரம் ஆகிறது.

கடையை நடத்த எனது அம்மா, சகோதரன், சகோதரி எல்லோரும் எனக்கு உதவியாக இருக்கிறார்கள். இதுதவிர, எங்கள் திருநங்கை சமூகத்தினரும் அவ்வப்போது வந்து உதவுவார்கள். சமீபத்தில், இனணயத்தில் என்னைப்பற்றி அறிந்து, எனது உணவின் சுவையைப் பற்றியும் அறிந்து பலரும் தேடி வந்து சாப்பிட்டுவிட்டு போகிறார்கள். இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் 2 கிலோ அரிசி அளவே இருந்த வியாபாரம். தற்போது ஒரு நாளைக்கு 10 கிலோ அரிசி வரை வளர்ந்துள்ளது.இங்கு சாப்பிட வரும் பலரும், என்னைப் பற்றி விசாரித்துவிட்டு, உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமா? என்று தானாகவே கேட்டு, உதவி செய்கிறார்கள். மத்திய அரசு சார்பில் தெருவோர வியாபாரிகளுக்கு என்று வழங்கப்படும் லோன் உதவித் திட்டத்தில், எனக்கு வங்கியிலிருந்து தேடி வந்து கொடுத்து உதவினார்கள். இவையெல்லாம் எனக்கு அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி போக, பெரிய ஊக்கமும், உந்துதலையும் அளிக்கிறது. இந்த உணவகத் தொழிலில் தற்போது, போதுமான வருமானமும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. விரைவில், தள்ளுவண்டிக் கடையை உணவகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக இப்போது முயன்று வருகிறேன். உழைப்பும், ஆர்வமும் இருந்தால், யாரும் உணவகத் தொழிலில் ஜெயிக்கலாம்’’ என நம்பிக்கை பொங்க பேசி முடித்தார் சுமதி அக்கா.

– தேவி குமரேசன்

சிக்கன் கைமா

தேவையான பொருட்கள்

கொத்துக்கறி – 200 கிராம்
வெங்காயம் (நறுக்கியது) – 2
தக்காளி – 1
பிரிஞ்சி இலை -1
இலவங்கப்பட்டை 1 துண்டு
ஏலக்காய் – 2
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
கிராம்பு 4-5
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் – அரை தேக்கரண்டி
சீரகப்பொடி – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
தயிர் – 2 தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி.

செய்முறை:

அனைத்து மசாலாப் பொருட்களையும் நெய்யில் வறுத்தெடுத்து, அரைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில், எண்ணெய்விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பின்னர், நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்த்து, தக்காளி மிருதுவாகும் வரை வதக்கவும். அதன்பிறகு தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். சுத்தம் செய்த சிக்கன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கி, நன்கு வேகவிடவும். நன்கு வெந்து சுருண்டுவந்ததும் நறுக்கிய கொத்துமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான சிக்கன் கைமா தயார்.

The post ரூ.60க்கு மீன்குழம்பு காம்போ… ரூ.70க்கு கறிக்குழம்பு காம்போ… appeared first on Dinakaran.

Tags : Sumathi ,Chintadirippet ,Chennai ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா