×

டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார்

டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஜி20 அமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை ஏற்றுள்ளது. ஜி20 குழுவின் 18வது மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோா் இந்த மாநாட்டில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செல்லும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரும் சனிக்கிழமை இரவு நடைபெறும் விருந்திலும் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநில அமைச்சரவை வட்டாரங்கள் கூறுகையில், ”இந்தியக் கூட்டணியின் மற்ற சில தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு இரவு உணவில் கலந்து கொள்ளும் முடிவை பானர்ஜி எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஜி20 மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்கவும், அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக மம்தா விருந்தில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே சுமூகமான உறவு நிலவி வருவதையடுத்து, ஷேக் ஹசீனா இரவு விருந்தில் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து முதலமைச்சர் அதில் கலந்துகொள்ள முடிவு செய்தார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டின் அழைப்புக் கடிதத்தில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று பயன்படுத்தியதற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார். இது நாட்டின் வரலாற்றைச் சிதைக்கும் அப்பட்டமான முயற்சி என்று அவர் கூறினார். இந்நிலையில், ஜி20 மாநாட்டில் இரவு விருந்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்வார் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,G20 summit dinner ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியில் நாளை நடக்கிறது இந்தியா...