×

மீன் கடையில் இருந்தபோது அமமுக நிர்வாகி படுகொலை: சென்னையில் பயங்கரம்


சென்னை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த கோயில் திருவிழாவில் டிஜிட்டல் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ராஜேஷ் என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும் அதிமுக பிரமுகர் மதன் தலைமையில் ஒரு கோஷ்டியும் மோதிக்கொண்டனர். இந்தநிலையில் ராஜேசை கொலை செய்ய முடிவு செய்த எதிர்தரப்பினர் ஆள்மாறாட்டத்தில் அவரது தம்பி வீரபாண்டியனை கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கொலை செய்தனர். இக்கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் மதன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராஜேஷ் தரப்பு இதற்கு பழிக்குப்பழியாக அதிமுக பிரமுகர் மதனை கடந்த 2015 நவம்பர் 25ம் தேதி இரவு படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ராஜேஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பின்னர் ராஜேஷ் அதிமுகவில் இணைந்து அப்பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரிடம், மதனின் தம்பியான அமமுக திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜெகன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் ராஜேஷ் தரப்புக்கும் மதன் தரப்புக்கும் பகை அதிகரித்தது. பின்னர் மதன் தரப்பு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜேஷை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி அவரது தலையை துண்டித்து அதிகளவில் மக்கள் கூடும் ஆசாத்நகர் சாலையில் வீசினர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்த அமமுக பிரமுகர் ஜெகன் பிரச்னையில் இருந்து ஒதுங்கி சென்னை ரெட்டிபாளையம் சாலையில் மீன்கடை நடத்தி வந்தார். நேற்றிரவு கடையில் இருந்த ஜெகனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகன் கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரிக்கின்றனர். இந்நிலையில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மேற்பார்வையில் முத்துப்பேட்டை பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மீன் கடையில் இருந்தபோது அமமுக நிர்வாகி படுகொலை: சென்னையில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Amatmata ,Chennai ,Govilur ,Muthuppet, Thiruvarur district ,Imperative Executive ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு