×

சித்தூர் அருகே மாம்பழ ஜூஸ் தொழிற்சாலையின் கழிவுநீர் ஏரியில் கலந்ததால் செத்து மிதந்த மீன்கள்

*துர்நாற்றத்தால் கிராம மக்கள் அவதி

சித்தூர் : சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலம் ஸ்ரீரங்கம் தலித் வாடா கிராமம் அருகே தனியார் மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீர் கிராமம் அருகே உள்ள ஏரியில் கலக்கப்படுகிறது. இதனால் நீர் மாசு கட்டுப்பாடு ஏற்பட்டு ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எங்கள் கிராமம் அருகே தனியார் மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வரும் கழிவுநீர் அனைத்தும் எங்கள் கிராமம் அருகே உள்ள ஏரியில் கலக்கப்படுகிறது.

இதனால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. அதுமட்டுமல்லாமல் எங்கள் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆடுகளையும், மாடுகளையும் வளர்த்து குடும்பம் நடத்தி வருகிறார்கள். இந்த ஆடுகள், மாடுகள் கிராமம் அருகே உள்ள ஏரியில் தண்ணீர் குடித்து வந்தது. ஆனால் தற்போது ஏரியில் உள்ள நீர் மாசடைந்து அதில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும், ஆடு, மாடுகள் குடிக்க நீர் இல்லாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் ஏரியில் ஆழ்துளை கிணறு உள்ளது இந்த கிணற்றின் மூலம் எங்கள் கிராமத்திற்கும் பக்கத்தில் உள்ள சிகே பள்ளி கிராமத்திற்கும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தொழிற்சாலையில் கழிவுநீர் கலப்பதால் நாங்கள் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம்.

எனவே, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு நீரை கலக்கும் தொழிற்சாலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அப்போது, எஸ்சி எஸ்டி ஐக்கிய வேதிக்க மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீரங்க பள்ளி முனிசாமி, எஸ் சி சங்க மாவட்ட தலைவர் தனஞ்ஜெயராவ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் தாவீத், தலித் சங்க நிர்வாகிகள் தாஸ், மார்க்கண்டையா, சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post சித்தூர் அருகே மாம்பழ ஜூஸ் தொழிற்சாலையின் கழிவுநீர் ஏரியில் கலந்ததால் செத்து மிதந்த மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Chittoor ,Badarnathal Village ,Awadi ,Chittoor District Gudipala Zone ,Sriranangam ,Thalit Wada Village ,Dinakaran ,
× RELATED சித்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்...