×

முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் காளைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி

*400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

வேடசந்தூர் : அய்யலூர் அருகே கோயில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற காளைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள அப்பிநாயக்கன்பட்டியில் செல்வ விநாயகர், முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து, தேங்காய் பூஜைகள் நடத்தினர். நேற்று முன்தினம் பக்தர்கள் தேவராட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான ‘எருது ஓட்டம்’ என்ற காளைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கொடிநாயக்கர் மந்தை, சிக்கம நாயக்கர் மந்தை, கோட்டூர் நாயக்கர் மந்தை, பெரிய கோட்டை மந்தை உள்ளிட்ட 12 மந்தைகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.

பின்னர் காளைகளை கொத்துகொம்பு என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து உருமி ஓசை முழங்கியதும், காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் சீறிப்பாயந்து எல்லைக்கோட்டை நோக்கி ஓடின. போட்டியின்போது பொதுமக்கள் கைகளைத்தட்டி மாடுகளை உற்சாகமூட்டினர். அதன்பின்னர் எல்லைக்கோட்டை கடந்து சென்ற காளைகள் மீது மஞ்சள்பொடி தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் முதலிடம் பிடித்த கரூர் மாவட்டம் கோட்டை நாயக்கர் மந்தையை சேர்ந்த காளைக்கு பாரம்பரிய முறைப்படி எலுமிச்சம் பழம் மற்றும் மஞ்சள் பொடி பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கின கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் காளைகளுக்கான ஓட்டப்பந்தய போட்டி appeared first on Dinakaran.

Tags : Muthalamman ,Kaliamman ,Bhagavathy Amman temple festival ,race ,Vedasandur ,Ayyallur ,
× RELATED சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்