×

வேலூர்- ஆற்காடு சாலையில் கட்டிடங்கள் அகற்றியதில் ₹8.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு

*அதிகாரிகள் தகவல்

வேலூர் : வேலூர்- ஆற்காடு சாலையில் கட்டிடங்கள் அகற்றியதில் ₹8.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் காகிதப்பட்டறை ஆற்காடு சாலையையொட்டி, டான்சி நிறுவனம் அருகிலும் மலையடிவாரத்திலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 32 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இக்கட்டிடங்களை இடித்து அகற்றும் பணி கடந்த 30ம் தேதி தொடங்கியது.

தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக மூன்றடுக்கு மாடிக்கட்டிடம், இரண்டடுக்கு மாடிக்கட்டிடம் என மொத்தம் 32 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டிருந்தன. தற்போது, இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ₹8.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர்- ஆற்காடு சாலையில் கடந்த வாரம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சுமார் 24 ஆயிரம் அடி இடம் மீட்கப்பட்டது.

வேலூர்- ஆற்காடு சாலையில் அரசின் மதிப்பீட்டில் ஒரு சதுரடி சுமார் ₹3500க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ₹8.40 கோடி இருக்கும்’ என்றனர்.

மீதமுள்ள ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை வேண்டும்

வேலூர்- ஆற்காடு சாலையில் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். தற்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதியிலேயே, வனத்துறை மற்றும் வருவாய் துறையினருக்கு சொந்தமான இடங்களை பலரும் ஆக்கிரமித்துள்ளனர். சூட்டோடு சூடாக உடனடியாக ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவதற்கு வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர்- ஆற்காடு சாலையில் கட்டிடங்கள் அகற்றியதில் ₹8.40 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vellore-Arcot ,Vellore ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...