×

மாவட்டம் முழுவதும் 1636 பள்ளி, கல்லூரிகளில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி

*3.50 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் புத்தக திருவிழாவையொட்டி நேற்று நடந்த வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 1636 பள்ளி, கல்லூரிகளில் 3.50 லட்சம் மாணவ, மாணவிகள் புத்தகம் வாசிப்பில் ஈடுபட்டனர்.தமிழக முதல்வர் மாவட்டம்தோறும் புத்தக திருவிழாக்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் 5ம் ஆண்டு புத்தக திருவிழா வரும் 8ம் தேதி முதல் 17ம் தேதி வரை வள்ளலார் திடலில் நடக்கிறது. பல ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

புத்தகத் திருவிழாவையொட்டி, ஆசிரியர் தினமான நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் \\”தர்மபுரி வாசிக்கிறது\\” என்ற தலைப்பில் விழிப்புணர்வு வாசிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. 1,636 பள்ளி மற்றும் கல்லூரிகளில் 3.50 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்தனர். அளே தர்மபுரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். பின்னர், மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

முன்னதாக கலெக்டர் பேசியதாவது: புத்தகம் வாசிப்பு பழக்கம் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுடையே குறைந்து கொண்டே வருகிறது. செல்போன் பயன்பாட்டினால் வாசிப்பு பழக்கம் குறைகிறது. சிறுவயதிலேயே வாசிப்பு பழக்கம் இருந்தால் எழுத்து பிழை வராது. கற்பனை திறன் அதிகரிக்கும். மாணவ-மாணவிகள் புத்தக வாசிப்புக்கு என்று பள்ளி, கல்லூரிகளில் மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வாசிப்பு பழக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால், ஒரு பாட நேரத்தை வாசிப்பு நேரமாக மாற்ற பட்டியல் தயாரித்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளிகளில் உள்ள நூலகங்களில் இருக்கும் புத்தகங்களை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச் சென்று வாசித்து பின்பு ஒப்படைக்கலாம். எங்களுடைய சிறு வயது காலத்தில் நூலகங்கள் குறைவாகவும், புத்தகங்கள் கிடைப்பதற்கு அரிதாகவும் இருக்கும். ஆனால், தற்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் கிராமங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வாசிப்பிற்கு புத்தகங்கள் எளிமையாக கிடைக்கிறது. இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொண்டு, தினமும் பத்து நிமிடங்கள் அல்லது இரண்டு பக்கங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

மாணவ, மாணவிகள் சிறந்த கல்வியை கற்று, சிறப்பான உயர்ந்த நிலையினை அடைந்திட இதன் மூலம் பெறும் அறிவை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும். உயர்ந்த கல்வியை கற்று, உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற தன்னம்பிக்கையை பள்ளிகளில் படிக்கும் பருவத்திலேயே நீங்கள் மனதில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இளமையில் கற்ற கல்வி எப்போதும் தங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

புத்தக வாசிப்பினால் எதிர்காலத்தில் உயர்ந்த பதவிகளான இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட ஏராளமான உயர் பதவிகளுக்கு செல்ல முடியும். இப்புத்தக வாசிப்பு பழக்கம் உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அறிவை பெருக்கி, உங்களது வாழ்வியலோடு இணைந்து, நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இப்புத்தக வாசிப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் இப்புத்தக திருவிழாவினை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகம் வாசிப்பு ஒரு வெற்றியாளரை உருவாக்கும். வாசிப்பது மூலம் அறிவு கிடைக்கும். இந்த அறிவு மூலம் நம்மிடம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
பின்னர் கலெக்டர் சாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து 5ம் ஆண்டு புத்தகத் திருவிழா வள்ளலார் திடலில் வரும் 8ம் தேதி முதல் 17ம்தேதி வரை 10 நாட்களுக்கு நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று தர்மபுரி வாசிக்கிறது என்ற விழிப்புணர்வு வாசிப்பு நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 1607 பள்ளிகளிலும், 29 கல்லூரிகளிலும் உள்ள சுமார் 3.50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகம் வாசித்தனர்.

தர்மபுரி புத்தகத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இப்புத்தக திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை புத்தகக் கடைகள் திறந்திருக்கும். தினசரி மாலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடக்கிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள், போட்டித் தேர்வுக்குத் தயாராகக் கூடிய இளைஞர்கள், இல்லத்தரசிகள், மூத்த குடிமக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் புத்தக அரங்குகள், சிறுதானியங்களுக்கான உணவு அரங்குகள், அரசின் திட்டங்கள் தொடர்பான கண்காட்சி அரங்குகள், சிறுவர்கள் குழந்தைகள் விளையாடும் விதமாக தனி இடமும் அமைக்கப்பட உள்ளது.

இப்புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் புத்தகம் வழங்க பதிப்பகத்தாரிடம் மற்றும் அரங்கு அமைப்போரிடம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தகடூர் புத்தகப் பேரவை, பாரதி புத்தகாலயம் மூலம் மாவட்டம் முழுவதும் இப்புத்தக திருவிழாக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இருக்கும் மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்ககூடிய வகையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து ஒத்துழைப்பு வழங்கிடுமாறும், அறிவுசார் புத்தகங்களை வாங்கி பயனடையலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் குமார், கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநர் ராமலட்சுமி, தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன், தர்மபுரி தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் டாக்டர் செந்தில், தலைவர் சிசுபாலன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டம் முழுவதும் 1636 பள்ளி, கல்லூரிகளில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Reading ,Dinakaran ,
× RELATED ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா தொடங்கியது..!!