×

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் பொதுமக்கள் மனுக்களை தாளாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக கருதி நடவடிக்கை

*அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தென்காசி : மக்கள் அளிக்கும் மனுக்களை தாள்களாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

தென்காசி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் வரவேற்றார்.

கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், முதல்வரின் முகவரி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், 15வது ஒன்றிய நிதிக்குழு பணி முன்னேற்றம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், திறன் பயிற்சி, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், வருவாய்த்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நெடுஞ்சாலைகள் துறை, ஆவின், உள்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அவர் பேசியதாவது: முதலமைச்சர் கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறார். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்கும் போது அலுவலர்கள் அவற்றை உடனடியாக பரிசீலித்து பதிலளிக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை தாள்களாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீண்டநாள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து கல்வி கற்க செய்வதிலும் கல்வி திட்டங்கள் அனைத்தும் எல்லா மாணவ, மாணவிகளுக்கும் சென்றடைவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, கிராம சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளில் அலுவலர்கள் அதிக கவனம் செலுத்தி விரைவாக பணிகளை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் அதிக அளவில் பொதுதேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆய்வின் போது மக்கள் பிரதிநிதிகளும் உடன் அழைத்து செல்லப்பட வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் தென்காசி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். பணிகளில் சுணக்கம் கண்டறிப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே அனைத்து துறை அலுவலர்களும் அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து அரசுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டரங்கில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மகளிர் திட்டத்தின் சார்பில் மகத்தான சாதனைகள் 2 ஆண்டு ஆட்சி ஓயா உழைப்பின் ஈராண்டு புகைப்பட கண்காட்சியினையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் துறை செயல்பாடுகள் கண்காட்சி மற்றும் தலைவர்களின் ஓவியங்கள், வண்ணமிகு பறவைகள் உள்ளிட்ட காய்கறி வடிவமைப்பு கண்காட்சியினையும் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருள்கள் கண்காட்சியினையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கூட்டத்தில் சிறப்பு திட்டச்செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார் (தென்காசி), ராஜா (சங்கரன்கோவில்), சதன் திருமலைகுமார் (வாசுதேவநல்லூர்), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பிரான்சிஸ் மகாராஜன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

₹35.68 கோடி நலத்திட்ட உதவி

கூட்டத்துக்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்படி தென்காசி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாராண நிதி உயர்கல்வி உதவி தொகை ₹1லட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ₹34.42 கோடி மதிப்பில் கடனுதவியும்,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) சார்பில் 10 பயனாளிகளுக்கு இளைஞர் சுயவேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ₹74 லட்சத்து 66 ஆயிரத்து 704 மதிப்பிலும், கூட்டுறவு துறை சார்பில் 1 பயனாளிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் ₹பதினொரு லட்சத்து அறுபத்து ஐந்து ஆயிரம் மதிப்பில் உழவு இயந்திரம் மற்றும் பின்புற இணைக்கப்பட்ட கருவியும்,

தோட்டக்கலைத்துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம், பாரதப்பிரதமரின் நுண்ணுயிர்ப் பாசனத்திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ஐந்து லட்சத்து தொண்ணூற்று இரண்டு ஆயிரத்து ஐந்நுாற்று அறுபத்து நான்கு ரூபாய் மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் உளுந்து-வறட்சி நிவாரணம், நெல்-வறட்சி நிவாரணம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்,

மின்கலத்தில் இயங்கும் விசை தெளிப்பான் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் தார்பாலின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் 8 பயனாளிகளுக்கு ஐம்பத்து ஏழு ஆயிரத்து இருநுாற்று எழுபத்து ஐந்து ரூபாய் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 1 பயனாளிக்கு ₹12 லட்சம் மதிப்பில் கடனுதவியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 21 பயனாளிகளுக்கு பதினொரு ஆயிரத்துதொண்ணூறு ஆயிரம் ரூபாய் மதிப்பில் கடனுதவியும், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனங்கள் எட்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்பிலும் என மொத்தம் ₹35.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

The post தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு கூட்டம் பொதுமக்கள் மனுக்களை தாளாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக கருதி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tenkasi Collector ,Minister ,Udayanidhi Stal ,Tenkasi ,
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...