×

அத்தாணி-அம்மாபாளையம் குறுக்கே பவானி ஆற்றில் பாலம் அமைக்கப்படுமா?

*எம்எல்ஏவிடம் நூதனமாக கோரிக்கை வைத்த பள்ளி மாணவ-மாணவிகள்

அந்தியூர் : அத்தாணி-அம்மாபாளையம் இடையே பவானி ஆற்றில் எம்எல்ஏவை பரிசலில் அழைத்துச்சென்று பள்ளி மாணவ-மாணவிகள், பாலம் அமைக்க வேண்டும் என நூதன முறையில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பாலம் அமைக்கப்படுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் , அந்தியூர் அடுத்துள்ள அத்தாணி அருகே அம்மாபாளையம் ஊராட்சி உள்ளது.

இப்பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சுற்றிலும் வயல்வெளிகள், தோட்டங்கள், வாய்க்கால்கள் மற்றும் ஆறு நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி 5-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் மேல் படிப்பை தொடர பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிக்கும் தினமும் காலை ,மாலை வேலைகளில் பவானி ஆற்றை பரிசலில் பல ஆண்டுகளாக கடந்து வருகின்றனர். இப்பகுதி வேலைக்கு செல்லும் மக்கள் தினமும் அத்தாணி வந்து ஈரோடு, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், கோபி ஆகிய ஊர்களுக்கு சென்று வருகிறார்கள்.

அம்மாபாளையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவுக்கு பரிசலில் 10 நிமிடத்தில் வந்து விடலாம். ஆனால் மழைக்காலங்களில் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும்பொழுது பரிசலில் இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அப்போது அப்பகுதி மக்கள் அம்மாபாளையம், மேவாணி, கீழ்வாணி, கருவல்வாடி புதூர் வழியாக அத்தாணிக்கு 7 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும். மேலும் அம்மாபாளையம், கணேசம்புதூர், கருங்கரடு, சவண்டபூர் வழியாக அத்தாணிக்கு 8 கிலோ மீட்டர் சுற்றி வரவேண்டும்.

மாற்றாக இதற்கு அம்மாபாளையத்திற்கும் அத்தாணி கைகாட்டி பிரிவுக்கும் இடையே பவானி ஆற்றின் குறுக்கே 100 மீட்டர் தொலைவிற்கு பாலம் அமைத்தால் 10 நிமிடத்தில் அத்தாணிக்கு வந்து விடலாம். தற்போது வரை அம்மாபாளையம் பவானி ஆற்றின் இடையே பாலம் இல்லை. இதனால் அம்மாபாளையத்திலிருந்து பவானி ஆற்றில் பரிசலில் பயணித்து அக்கரையில் உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பின்னர் அங்கிருந்து பஸ் ஏறி மேற்கூறிய ஊர்களுக்கு தங்களது பணிகளுக்கும், படிப்புக்கும் சென்று வருகின்றனர்.இப்பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மற்றும் தோட்டங்களின் உரிமையாளர்கள் அருகில் இருக்கும் ஊர்களில் வசிக்கின்றனர். விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் வேலையாட்களை பரிசல்கள் மூலம் அழைத்துச் செல்வதில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழையினால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மக்கள் பரிசலில் ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் இருந்து குறித்த நேரத்துக்கு முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு நேரில் வந்து பார்க்குமாறு எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று நேற்று காலை எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் அம்மாபாளையம்- அத்தாணி கைகாட்டி பிரிவுக்கு இடையே ஓடும் பவானி ஆற்றினை நேரில் பார்வையிட்டார்.

அப்போது, அவருடன் கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஊராட்சி தலைவர் சரஸ்வதி ராஜசேகர், தகவல் தொழில் நுட்ப மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகளுடன் பவானி ஆற்றை பரிசலில் எம்எல்ஏ கடந்து வந்தார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு உள்ள மனநிலையையும், எவ்வளவு ஆண்டுகளாக இப்படி பரிசல் பயணம் செய்து பள்ளிக்கு செல்கிறீர்கள் என்றும் எம்எல்ஏ கேட்டறிந்தார். பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு நிரந்தர தீர்வாக பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி வெங்கடாசலம் கூறுகையில், ‘‘இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாக பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளது. இதுகுறித்து பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகளின் பாதிப்புகள் இதனால் எந்த அளவிற்கு ஏற்படுகிறது என்று பேசியுள்ளதாகவும், அதற்கான கோரிக்கை மனுக்களை இப்பகுதி மக்களின் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு முறையாக தெரிவித்து அவர்களின் கனிவான பரிசீலனையின் பேரில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி கற்பதில் எந்த குறைபாடும் ஏற்படாத வண்ணம் அவர்களுடைய பிரச்னையை தமிழ்நாடு முதல்வர் தீர்த்து வைத்து வரும் நிலையில், இதனையும் தீர்த்து வைப்பார்’’ என தெரிவித்தார்.

இந்நிலையில், அனைத்து தரப்பு மக்களின் சிரமங்களை போக்குவதற்காக அம்மாபாளையம்-கீழ்வாணி இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் 50 ஆண்டுகளாக கோரிக்கையை நிறைவேற்றித்தர அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் அம்மாபாளையம் பகுதியில் இருந்து அத்தாணி அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள், வாகனம் ஏற்பாடு செய்தால் மட்டுமே பள்ளிக்கு செல்ல முடியும். இல்லை என்றால் பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொள்ளும் சூழல் நிலவுகிறது என குறிப்பிட்டனர்.

The post அத்தாணி-அம்மாபாளையம் குறுக்கே பவானி ஆற்றில் பாலம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Bhavani river ,Athani-Ammapalayam ,MLA ,Anthiyur ,
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...