×

கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி

6.9.2023

நம்முடைய சமய மரபில் எத்தனையோ பண்டிகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி பண்டிகைகள் உண்டு. அந்தந்த தெய்வத்திற்கு தனித்தனி சிறப்புகளும் உண்டு. ஆனால் குழந்தைகள் கூட குதூகலமாகக் கொண்டாடுகின்ற பண்டிகைகளில் ஒன்று “கிருஷ்ண ஜெயந்தி”. மற்றொன்று விநாயகர் சதுர்த்தி. இரண்டும் அடுத்தடுத்து வரும் பண்டிகைகள் என்பது மற்றுமொரு சிறப்பு. தேசிய அளவில், அனேகமாக எல்லா மாநிலங்களிலும், எல்லா மொழி பேசுபவர்களும், கொண்டாடும் ஒரு பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி என்பது மற்றுமொரு விசேஷம்.

குழந்தைகளுக்கானது

குழந்தைகளுக்கான மிகச் சிறப்பான பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. அன்று தயாரிக்கப்படும் பிரசாதங்கள் எல்லாமே குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுகின்ற சீடை, அவல், லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணெய், பால்திரட்டு, நாட்டு சர்க்கரை வடை போன்ற பிரசாதங்கள். இவைகள் விரும்பாத குழந்தைகள் உண்டா? அடுத்து, எந்தக் குழந்தையாக இருந்தாலும், அந்தக் குழந்தையை ஆசையோடு அழைக்கின்ற பொழுது வைக்கும் பேர் “கண்ணா”. இந்தப் பெயர் கிருஷ்ணனுக்கு உரியது அல்லவா.

அடுத்து அந்த விழாவில் குழந்தைகளுக்கு கிருஷ்ணனாக வேடமிட்டு பெரியவர்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அன்றைக்கு குழந்தைகளை கிருஷ்ணனாகவே பாவிக்கிறோம். ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும், மயில் கிரீடம் வைத்து ஒரு புல்லாங்குழல் கொடுத்துவிட்டால் கிருஷ்ணனாக மாறிவிடும் மகிழ்ச்சியைக் காண்கின்றோம். இப்படிக் குழந்தைகளும் கலந்து கொள்ளும் மகத்தான பண்டிகை வேறு என்ன இருக்க முடியும்?

பலபெயர்களில் விழா

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் அவதார வைபவத்தைக் கொண்டாடுகிற விழாவாகும். இது இந்தியா முழுதும் கொண்டாடப்படும் தேசிய அளவிலான விழா. ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி திதி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதியிலும் மாலை நேரத்தில் சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது. 1982 ம் ஆண்டு முதல் தமிழக ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திக்கு அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. பல இடங்களில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல், கோ பூஜை என கோலாகலமாக நடக்கிறது. கிருஷ்ணன் கோயில்களில் மட்டுமல்லாது, எல்லா பெருமாள் கோயில்களிலும், விசேஷ திருமஞ்சன அலங்காரங்கள், வீதி உலா நடைபெறும்.

வட இந்தியாவில் தகி அண்டி

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. கண்ணன் மேலே உறியில் கட்டப்பட்டிருந்த வெண்ணெயை நண்பர்களோடு களவு கொண்டான் என்று பாகவதத்தில் வருகிறது. இதன் தத்துவார்த்தம் வேறு. இருப்பினும் இந்த நிகழ்வு பக்தர்களைக் கவர்ந்தது. மகாராஷ்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள வெண்ணெய்த்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பார்கள்.

இதற்காக தெருக்களில் உயரமான இடங்களில் பானைகளில் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுகிறது. இதனுடன் பணமுடிப்பும் கட்டப்படுகிறது. கோவிந்தாக்கள் குழுக்களை அமைத்து இரண்டு, மூன்று தகி அண்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுண்டு. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் இசை வாத்தியங்களை முழங்குவதும், விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.

ராச லீலா

இராமாவதாரத்தில், காட்டில் இருந்த முனிவர்கள், இராமனின் அழகைக் கண்டு, தாங்கள் பெண்ணாக இருந்தால் அவனை அடையலாமே என்று விரும்பினார்களாம். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே கிருஷ்ணாவதாரத்தில் ஆயர் குலத்தில் பெண்களாக பிறந்தார்களாம். அவர்கள் விருப்பத்தை கண்ணன் நிறைவேற்றியது தான் ராசலீலை. இதை அற்புதமாக விளக்குவது ஜெயதேவரின் அஷ்டபதி. தத்துவ ரீதியில் பெண்கள் எல்லோரும் ஜீவாத்மாக்கள். பகவான் கண்ணன் மட்டுமே பரம புருஷன். (

பரமாத்மா.) ஜீவன்களின் லட்சியம் பரமாத்மாவை அடைந்து இன்புறுவது என்பதை விளக்குவது தான் ராசலீலை. கண்ணனின் ராசலீலைகளை விளக்கும் `கர்பா’ என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபியர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப் படுகின்றன.

கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி

கேரளாவில் குருவாயூர் கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோயிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.

ராதே கிருஷ்ணா

கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார். வட இந்தியாவில் கண்ணனின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பகுதிகளில் எல்லாம் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்றைக்கும் எளிய மக்களால் கொண்டாடப் படுகிறது.

இப்பகுதி மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது, வணக்கம் தெரிவித்துக் கொள்வது போல ராதே கிருஷ்ணா என்கின்ற வார்த்தையைத்தான் பரிமாறிக் கொள்வார்கள்.  கிருஷ்ணரை, தங்கள் இதயத்திலும் நாவிலும் சதாசர்வகாலமும் வைத்து பூஜிக்கும் பழக்கம் இப்பகுதி மக்களிடம் உண்டு. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

எப்படிக் கொண்டாட வேண்டும்?

கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு பார்ப்பது பக்தியை வளர்க்கும். வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை. கண்ணனை வழிபட்டால் சொன்னது பலிக்கும். மனதில் உள்ள கெட்ட எண்ணங்களும், அகந்தையும் அழியும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். “ஓம் நமோ பகவதே வாசுதேவாயா” போன்ற கிருஷ்ண மந்திரங்களை ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம்மீது படும்.

திருமணத்தடைகள்

பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமணத்தடைகள் விலகி கல்யாணம் கைகூடும். இதற்கு ஆதாரம்தான், ஆண்டாளின் வாழ்க்கை. திருப்பாவைப் பாடி கண்ணனே கணவனாக அமைய நோன்பு நோற்றாள். கண்ணனை கணவனாக அடைய கனவு கண்டு “வாரணம் ஆயிரம்” என ஒரு பதிகம் பாடினாள். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து 48 வாரம் இந்த பதிகம் பாடினால் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கும்.

வைணவ திருமண மரபில் ஒவ்வொரு மணமகனையும் கண்ணனாகவும், ஒவ்வொரு மணமகளையும் ஆண்டாளாகவும் பாவிப்பது வழக்கம். விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

பாகவதத்தில்…

கிருஷ்ண லீலையை மனம் ஒன்றிக் கேட்டால் பசி, தாகம் ஏற்படாது. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும். அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் தனது படைகளுக்கு முன்பு கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

சங்க இலக்கியங்களில் கண்ணன்

பரிபாடல் தொகுப்பில் எழுபது பாடல்கள் இருந்தன. தற்போது இருபத்தி இரண்டு பாடல்களே கிடைக்கின்றன இருபத்தி இரண்டில் மாயோன் மீது ஆறு பாடல்களும் இருக்கின்றன. இதில் கண்ணனைப் பற்றிய அத்தனை புராணச் செய்திகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. எட்டுத் தொகை நூற்களில், நற்றிணையில் கடவுள் வாழ்த்தாக ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்ற சங்கப்புலவர் பாடிய அற்புதமான பாடல் ஒன்று மாயோனின் மீது இருக்கிறது.

மாநிலம் சேவடியாகத் தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கையாக
விசும்பு மெய்யாகத் திசை கையாக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே.

‘‘சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை கிருஷ்ணனின் அத்தனை பண்புகளையும் புராண இதிகாசச் செய்திகளையும் பேசுகிறது’’. பலராமன் குறித்தும், நப்பின்னை குறித்தும், யாதவ குலம் குறித்தும், ராதையைக் குறித்தும் கூறப்பட்டுள்ளது. நீளா தேவியின் அம்சமான நப்பின்னையை குறித்து ஆழ்வார்களும் பாடியுள்ளனர்.

தமிழ் இலக்கியங்களில் கண்ணன்

பதினெண்கீழ்கணக்கு நூற்களில் ஒன்றான திரிகடுகம் கடவுள் வாழ்த்து மாயோனைப் போற்றுகிறது.

கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் – நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி

ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.

கண்ணன் குருந்த மரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தது போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும்படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது என்று கண்ணனின் கதையை இணைத்துப் பாடும் அகப்பாடல் இது.

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்
மரம் செல மிதித்த மா அல் போல
புன் தலை மடப்பிடி உணீ இயர்
அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)

இப்படிப் பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படித்தான் கொண்டாட வேண்டும்

ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த சஷ்டி முருகர் பெயரில் இருக்கிறது. சிவ ராத்திரி சிவன் பெயரில் உள்ளது. துர்காஷ்டமி, அம்பாள் பெயரில் உள்ளது. வரலட்சுமி விரதம் மகாலட்சுமி பெயரில் உள்ளது. நரசிம்ம ஜெயந்தி நரசிம்மர் பெயரில் உள்ளது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவர் பிறந்த இடத்தையும் (கோகுலம்) திதியையும் (அஷ்டமி) சேர்த்து கோகு லாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும். ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகள் படிக்க வேண்டும்.

துவாதச மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களையும் இனிப்பு வகைகளையும் படைக்க வேண்டும். குறிப்பாக பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை பாராயணம் செய்ய வேண்டும். வீட்டில் பூஜை செய்து முடித்தபிறகு அருகே உள்ள பெருமாள் ஆலயத்துக்குச் சென்று உற்சவாதிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

சகலமும் கிருஷ்ணார்ப்பணம்

“புண்ணியம் இது என்று உலகம் சொன்னால்
அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே”

என்று ஒரு கீதையின் சாரமாக அமைந்த பாடல் உண்டு. எந்தப் பூஜையோ, ஸம்ஸ்காரங்களோ அவற்றின் முடிவில், நமது ஆத்மார்த்த சமர்ப்பணத்தை இறைவனிடம் சொல்லிக் கொள்கின்ற ஒரு ஸ்லோகம். ‘‘விஷ்ணு சஹஸ்ரநாம’’ பாராயணத்தின் முடிவில் வருகின்ற ஸ்லோகம்தான்.

“காயேன வாசா மனஸேந்த்ரியை வா
புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி”.

இதன் பொருள்: காயேன உடலாலோ, வாசாவாக்கினாலோ, மனஸ் மனதினாலோ, இந்த்ரியை (வா) இந்த்ரியங்களினாலோ, புத்தி அறிவினாலோ, ஆத்மனா (வா)- ஆத்மாவினாலோ, ப்ரக்ருதே ஸ்வபாவாத் இயற்கையான குணவிஷேசத்தினாலோ, யத்யத் எது எதை, கரோமி – செய்கின் றேனோ, சகலம் அவை அனைத்தையும், பரஸ்மை நாராயணா இதி பரமபுருஷனாகிய நாராயணனுக்கே, சமர்ப்பயாமி சமர்ப்பிக்கிறேன் (அர்ப்பணிக்கிறேன்). காரணம், கீதையிலே பகவான் ‘‘சர்வ தர்மான் பரித்யஜ்ய’’ என்று எல்லாவற்றையும் எனக்கே சமர்ப்பணம் செய்வதன் மூலமாக, நீ தோஷங்களிலிருந்து விடுபடுகிறாய் என்று சொன்னார் அல்லவா. அதுதான் காரணம். இது கிருஷ்ணாவதாரத்திற்கே உரியது.

பூரண அவதாரங்கள்

பகவான் பல அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். அதில் முக்கியமாக தசாவதாரங்களைச் சொல்வார்கள்.

மீனோடு ஆமை கேழல் அரி
குறளாய் முன்னும் இராமனாய்த்
தானாய் பின்னும் இராமனாய்த்
தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னைக் கண்ணபுரத்து
அடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை
செப்பப் பாவம் நில்லாவே

என்று பகவான் எடுத்த பத்து அவதாரங் களையும் ஒரே பாட்டில் விவரித்துப்பாடியுள்ளார் திருமங்கையாழ்வார். இதில் இரண்டு அவதாரங்கள் பூர்ண அவதாரங்கள்.

1.இராம அவதாரம் 2. கிருஷ்ணாவதாரம். இரண்டிலும் தாயின் கர்ப்பத்தில் அவதரித்ததிலிருந்து, அவதாரத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய சோதிக்குத் திரும்புகின்ற வரை உள்ள நிகழ்ச்சிகள் பூரணமாக இருக்கின்றன. இராம அவதாரத்தை விவரிப்பது வால்மீகி ராமாயணம். கிருஷ்ணாவதாரத்தை விவரிப்பது ஸ்ரீமத் பாகவதம். ஒன்றை இதிகாசங்களில் சிறந்ததாகவும் இன்னொன்றை புராணங்களில் சிறந்ததாகவும் நம்முடைய சான்றோர்கள் பாராயணம் செய்வதுண்டு.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி appeared first on Dinakaran.

Tags : Krishna Jayanti ,Krishna ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...