×

ஊரக வேலை திட்டத்தில் உழைத்தவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்: அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம்

சென்னை: ஊரக வேலை திட்டத்தில் உழைத்தவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவும், தீபாவளி பண்டிகை என்பதால் மட்டுமே பிரதமருக்கு, முதல்வர் கடிதம் எழுதினாரே தவிர இதில் அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை என்று அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்த கருத்துகளுக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதில் அளித்துள்ளார்.இதுகுறித்து அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஊரக பகுதிகளில் திறன் சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஆண்டில் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க உறுதி செய்கிறது. தமிழ்நாட்டிற்கு 2021-22ம் ஆண்டு 25 கோடி மனித சக்தி நாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது இந்த நிதியாண்டான ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வழங்கிட ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட இலக்கீடு ஆகும். இது மாத வாரியாக பிரித்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும். அக்டோபர் 2021 வரை 22.01 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 2021 வரை இலக்கீடான 22.98 கோடி மனித சக்தி நாட்களுக்கு 96 சதவீத ஆகும். மேலும் மொத்த இலக்கீடான 25.00 கோடிக்கு 88 சதவீதம் ஆகும். தமிழகம் இந்த இரண்டு பிரிவிலும் தேசிய சராசரியை விட அதிகமாக எய்தியதன் மூலம் தொடர்ச்சியாக வேலை வழங்கி தேசிய அளவில் சிறப்பான நிலையில் உள்ளதை அறியலாம். இந்த நிதியாண்டில் தொழிலாளர்களின் ஊதியத்திற்கென செப்டம்பர் 2021 வரை ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்ட ரூ.3524.69 கோடி முழுவதும் 15.09.2021 வரை வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதற்கு பின்னர் ஊதியத்திற்கென ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்காமல் இருந்ததால் ஊதிய நிலுவை உயர்ந்து கொண்டே வந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாரத்தின் வியாழன் தொடங்கி அடுத்த வாரம் புதன் வரை நடைபெறும். வேலை முடிந்த தினம் தொடங்கி 8 தினங்களுக்குள் ஊதிய பட்டியல் தயார் செய்தல் மற்றும் ஊதிய பரிமாற்ற ஆணை பதிவேற்றம் ஆகியன உரிய நேரத்தில் மாநில அரசால் செய்து முடிக்கப்பட்டு அடுத்த 7 திங்களுக்குள் ஒன்றிய அரசால் ஊதியம் வழங்கப்படுவது வழக்கம்.ஆனால் 15.09.2021 தேதிக்கு பிறகு 05.10.2021 வரை ஊதியம் வழங்கப்படாததாலும் இக்கால கட்டத்தில் ஊதிய நிலுவை ரூ.561.81 கோடியாக உயர்ந்ததாலும் உடனடியாக ஊதியத்திற்கான நிதியினை விடுவிக்குமாறு ஒன்றிய அரசை 05.10.2021 அன்று கடிதத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், 26.10.2021 வரை ஊதிய நிலுவை ரூ.1046.20 கோடியாக மேலும் உயர்ந்ததை தொடர்ந்து, நானும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முதன்மை செயலர் இருவரும், ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சர் மற்றும் ஒன்றிய அரசு செயலரை கடந்த 27ம்தேதி நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். தொடர்ச்சியான கோரிக்கைகள் விடுத்தும், ஒன்றரை மாதம் கடந்தும் ஊதியத்திற்கான நிதி விடுவிக்கபடாததாலும், ஊதிய நிலுவை ரூ.1178.12 கோடியாக உயர்ந்ததாலும் தீபாவளி பண்டிகையை சுட்டிக்காட்டி உடலுழைப்பை தந்தவர்களுக்கு ஊதிய நிலுவையினை உடனடியாக விடுவிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடந்த 1ம்தேதி கடிதத்தில் பிரதமரிடம் கேட்டுக்கொண்டார். அவரது கடிதத்தை தொடர்ந்து கடந்த 2ம்தேதி அன்று ஒன்றிய அரசால் ஊதியத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தீபாவளி பண்டிகைகக்கு சில தினங்களே இருந்ததாலும், 20 லட்சம் தொழிலாளர்கள் ஊதியம் பெற்று தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நல்லெண்ணத்திலே எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லாமல் ஊதிய நிலுவையினை வெளியிட கோரி தமிழக முதல்வரால் கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் மாவட்ட சமூக தணிக்கை குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட தணிக்கையில், கடந்த 2017-18ம் ஆண்டில் ரூ.92 கோடியாகவும், 2018-19ல் ரூ.116 கோடி எனவும், 2019-20ம் ஆண்டில் ரூ.38 கோடி எனவும் மொத்தம் ரூ.246  கோடிக்கு நிதி முறைகேடுகள் நடைபெற்றது என இணைய தளத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையில் தற்போதைய தேதி வரை ரூ.1.87 கோடி மாவட்ட அளவிலான உயர்நிலைக் குழு மூலம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையினை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்படும். தேவையான இனங்களில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். சமூகதணிக்கை தடை பத்திகளைத் நிவர்த்தி செய்ய மாவட்ட கலெக்டர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையின் கீழ் உயர்மட்டகுழு அமைக்கப்பட்டு தணிக்கை பத்திகள் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஆனால் உயர்மட்டக் குழுகூட்டங்கள் கொரோனா காரணமாக நடத்தப்படாததால் நிலுவையில் உள்ள தணிக்கை தடை பத்திகள் நிவர்த்தி செய்யபடவில்லை மற்றும் இழப்பீட்டுத் தொகையையும் மீட்க இயலவில்லை. தற்போது ஜூன்-2021 முதல் ஒவ்வொரு மாதமும் மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரால் உயர் மட்டக் குழு கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு தணிக்கை பத்திகள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. வரும் காலங்களில் இத்திட்டத்தின் கீழ் முறைகேடுகள் மற்றும் இழப்பீடுகள் நிகழ்வதை தவிர்க்கவும், பணிகளின் தரத்தினை உயர்த்தவும், மாநில, மாவட்ட, ஊராட்சி ஒன்றிய அளவில் அலுவலர்களால் தொடர்ந்து ஆய்வு செய்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர், உழைக்கின்ற மக்களுக்கு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற அக்கறையின் காரணமாக தான் துறை அமைச்சராகிய என்னையும், முதன்மை செயலரையும் அறிவுறுத்தி, ஒன்றிய அமைச்சரை சந்திக்க செய்ததோடு தீபாவளி பண்டிகை காலமானதால் பிரதமருக்கு கடிதம் எழுதினார்களே தவிர இதில் எந்த விதமான அரசியல் ஆதாயத்திற்கான நடவடிக்கையும் இல்லை.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post ஊரக வேலை திட்டத்தில் உழைத்தவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்: அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை அமைச்சர் பெரிய கருப்பன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Periya Karuppan ,Chennai ,Diwali festival ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...