×

கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்று கட்டப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம்: 5 ஆண்டுக்குள் கட்டிடங்கள் சேதமடைந்த அவலம்

ராமநாதபுரம், செப். 6: கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்று கட்டப்பட்ட ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், கட்டப்பட்டு 5 ஆண்டுக்குள் சிதிலமடைந்து, பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் பணியாற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு 1984 ல் கட்டிடங்கள் கட்டப்பட்டது. 35 வருடங்களை கடந்ததால் பழைய கட்டிடத்தின் பெரும் பகுதி சேதமடைந்தது. இதனால் அருகில் ரூ.11 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கடந்த 2016ல் திறக்கப்பட்டது. கட்டிட பணிகள் முழுமையாக முடியாத நிலையில் அவசர கதியில் 2018ம் ஆண்டு பெரும்பாலான அலுவலகங்கள் பழைய கட்டிடத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட துவங்கியது. இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதனை சேர்ந்த பிரிவு அலுவலகம், திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மற்றும் அதனை சேர்ந்த வளர்ச்சி பிரிவு அலுவலகம், செய்திமக்கள் தொடர்பு அலுவலகம், செயற்பொறியாளர் மற்றும் பிரிவு அ, பிரிவு ஆ, பிரிவு இ, பிரிவு சி, பிரிவு டி, பிரிவு எப், பிரிவு ஜி, பிரிவு எச், பிரிவு ஐ, பிரிவு ஜெ, பிரிவு கே, பிரிவு எல், பிரிவு எம், பிரிவி என், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறைகளின் அலுவலகம், துறை வாரியான கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தனிக்கைகள் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகிறது.

இதில் பெண்கள் உட்பட 900க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதிய கட்டிடம் செயல்பட துவங்கி 5 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் பெரும்பாலான கழிவறைகள் சேதமடைந்து விட்டது. முறையான கதவுகள் இன்றி ஒருவர் பாதுகாப்பில் மற்றவர் கழிவறையை பயன்படுத்தும் அவலம் இருக்கிறது. இதனால் பெண் ஊழியர்கள் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.கோப்பைகள் சேதமடைந்து இருப்பதால் மனித கழிவுகள் கழிவறையில் நிறைந்து சுகாதாரமற்று கிடக்கிறது.மேலும் கட்டிடத்திற்கு வெளியில் உள்ள செப்டிக் டேங்க்கிலிருந்து கழிவுநீர் கசிந்து வெளியேறி தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. துர்நாற்றம், தொற்று நோய் பரவும் அவலத்துடன் வேலை பார்க்கும் அவலம் இருப்பதாக அலுவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கட்டிடத்தின் பல இடங்களில் சிமிண்ட் காரைகள் பெயர்ந்து, விரிசல் விட்ட நிலையில் காணப்படுகிறது.
மனு அளித்தல், சான்றுகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், உதவிகள் பெற, நிறை, குறைகளுக்கு மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்தும் தினந்தோறும் நு£ற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை மீட்டிங் உள்ளிட்ட அலுவலக பணியில் பிஸியாக இருப்பதால் பொதுமக்கள் குறைந்தது அரை மணி நேரமாவது காத்து கிடக்கும் நிலை உள்ளது.

அப்போது தாகத்திற்கு குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் பரிதவித்து வருவதாக புகார் கூறுகின்றனர். அலுவலர்களுக்கு பொதுகழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கதவுகள் நகர்வு மாடலில்அமைக்கப்பட்டுள்ளதால் சரியாக பூட்டப்படுவதில்லை. இதனால் பாதுகாப்பிற்காக துணைக்கு ஒரு அலுவலரை அழைத்துக் கொண்டு செல்லும் அவலம் உள்ளது. மேலும் உள்ளே உள்ள கோப்பைகள், தண்ணீர் குழாய்கள் முறையாக இல்லை, இதனால் இயற்கை உபாதைகளுக்கு சுகாதாரமற்ற கழிவரையை பயன்படுத்த முடியாமலும் அவதிப்படுவதாக அலுவலர்கள் கூறுகின்றனர். எனவே கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரமான குடிநீர், பாதுகாப்பான, சுகாதாரமான கழிவறைகளை அமைத்து சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க கலெக்டர் விஷ்ணுசந்திரன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்

The post கடந்த அதிமுக ஆட்சியில் தரமற்று கட்டப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகம்: 5 ஆண்டுக்குள் கட்டிடங்கள் சேதமடைந்த அவலம் appeared first on Dinakaran.

Tags : District Collector's Office ,AIADMK ,Ramanathapuram ,Ramanathapuram collector office ,District collector office ,Dinakaran ,
× RELATED தேவையற்ற வேகத்தடை அகற்ற மதிமுக கவுன்சிலர் கோரிக்கை