×

தேயிலை தொழிற்சாலை, படகு இல்லம் மற்றும் நீர் மின் நிலையங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

ஊட்டி, செப்.6: நீலகிரி மாவட்ட குன்னூர் டைகர்ஹில் டேன்டீ தேயிலை தொழிற்சாலை, ஊட்டி படகு இல்லம் மற்றும் பைக்காரா இறுதி நிலை நீர் மின் நிலையம் ஆகிய பகுதிகளை தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இக்குழுவின் தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் குழுவின் உறுப்பினர்கள் அப்துல் சமது, எம்.எஸ்.எம். ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், கிரி, கோவிந்தசாமி, பிரகாஷ், பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் நேற்று ஊட்டி, குன்னூர், சிங்காரா பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

முதலாவதாக குன்னூர் டைகர்ஹில் டேன்டீ தேயிலை தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டபோது நிறுவனங்கள் குழுவினர் அங்கு தேயிலை கொள்முதல், உற்பத்தி, தரம் பிரித்தல், பேக்கிங், ஏற்றுமதி போன்ற செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து ஊட்டி படகு இல்லத்தில் ரூ.3.20 கோடி மதிப்பில் மரத்தால் கட்டப்பட்டு வரும் மர வீடு உணவகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினர். பின்னர், சிங்காராவில் அமைந்துள்ள 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பைக்காரா இறுதி நிலை நீர் மின் மின் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்சினி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு இணை செயலாளர் பாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, ஆர்டிஓக்கள் பூஷணகுமார், மகாராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மணிகண்டன், வட்டாட்சியர்கள் கனி சுந்தரம், சரவணக்குமார், டேன்டீ கோட்ட மேலாளர் பினோ, படகு இல்ல மேலாளர் ஜோசப் வில்லியம்ஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post தேயிலை தொழிற்சாலை, படகு இல்லம் மற்றும் நீர் மின் நிலையங்களில் தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Assembly Public Institutions Team Inspection ,Tea Factory ,Boat House ,Hydro Power Stations ,Ooty ,Nilgiri District ,Coonoor Tigerhill Dandee Tea Factory ,Ooty Boat House ,Baikara ,Dinakaran ,
× RELATED நிலுவை தொகை வழங்காததால் பாலகொலா...