×

அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்தி கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, செப்.6: அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தினார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்.மெய்யநாதன், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்று (செப்.5) அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காகவும், மாணவ, மாணவிகளின் நலனிற்காகவும் எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இன்றையதினம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ், அறந்தாங்கி ஒன்றியம், தொழுவங்காடு ஊராட்சியில் ரூ.37 இலட்சம் மதிப்பீட்டிலும், சுனையக்காடு ஊராட்சியில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டிலும், அழியாநிலை ஊராட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் திருவரங்குளம் ஒன்றியம், கீழாத்தூர் ஊராட்சியில் ரூ.48.50லட்சம் மதிப்பீட்டிலும், புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தையும் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருவரங்குளம் ஒன்றியம், நெடுவாசல், எல்.என்.புரம், மாங்காடு, வடகாடு ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 327 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் இன்றையதினம் வழங்கப்பட்டது. இதன்மூலம் இம்மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு சரியான நேரத்திற்குள் செல்வதுடன், நாள்தோறும் மிதிவண்டியினை பயன்படுத்துவதன் மூலம் உடற் பயிற்சியாகவும் அமைகிறது. மேலும் கீழாத்தூர் ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.34.50லட்சம் மதிப்பீட்டில் கீழாத்தூர் ரைஸ் மில் முதல் மூடன் குடியிருப்பு வரை சாலை அமைக்கும் பணி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற நலத் திட்டங்களை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அரசின் திட்டங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்தி கொள்ள வேண்டும் பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Pudukottai ,Meiyanathan ,
× RELATED காவிரி நீரை களவாடும் அதிமுக மாஜி...