×

மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தில் 205 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க அரசாணை: தமிழ்நாடு அரசு வெளியிட்டது

சென்னை: மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் 205 மீனவர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மீனவர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசானது, மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக இறக்கும் மீனவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசால் தேசிய மீன்வள கூட்டுறவு இணையத்தின் வழியாக மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படாத காலமான 1.6.2020 முதல் 18.10.2021 வரை இறந்த 205 மீனவர், மீனவ மகளிர் குடும்பங்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.8.2023 அன்று ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின் கீழ் அந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அறிவிப்பினை வெளியிட்டார்.

இதை செயல்படுத்தும் விதமாக இறந்த 205 மீனவர், மீனவ மகளிர் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வீதம் ₹4.10 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி 30.8.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மீனவர் குழு விபத்து காப்புறுதி திட்டத்தில் 205 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் வழங்க அரசாணை: தமிழ்நாடு அரசு வெளியிட்டது appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...