×

புதிய தலைமை செயலகம் கட்டிட விவகாரம் 2018ல் இருந்து தற்போது வரை எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான வழக்கில் தன்னையும் இணைக்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவுக்கு, தமிழ்நாடு அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சியில், கடந்த 2006-2011ம் ஆண்டில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி நடந்தது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்தது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தலாம் என்று2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக 2018ம் ஆண்டு செப்டம்பரில் பொதுத்துறைக்கு புகார் அளித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அதிமுக முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசியல் நோக்கத்திற்காக ஜெயவர்த்தனால் இந்த புகார் அளிக்கப்பட்டதாக கூறினார். 2018ம் ஆண்டிலிருந்து தற்போது வரை விசாரணை நடத்தியும் லஞ்ச ஒழிப்பு துறையால் எந்த ஆதாரமும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த ஜெயவர்த்தன் தரப்பு மூத்த வழக்கறிஞர் தினகரன், மனுதாரர் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையிலேயே புகார் அளித்துள்ளார் என்றார். இதையடுத்து, தன்னையும் வழக்கில் இணைக்கக் கோரி ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனு குறித்து இரண்டு வாரங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post புதிய தலைமை செயலகம் கட்டிட விவகாரம் 2018ல் இருந்து தற்போது வரை எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,ICourt ,Chennai ,AIADMK ,Jayavarthan ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...