×

49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்கும் முதல்வரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: நன்னடத்தை அடிப்படையில் 49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தெரிவித்துள்ளார். நீண்டகாலம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதலமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிந்துரைகள் இன்னும் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்து உள்துறை செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகர், தமிழக அரசின் பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை. ஆளுநர் மேலும் தாமதம் செய்வார் என்றார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆளுநரின் முடிவு என்ன என்பது குறித்து தெரிந்த பின்பு வழக்குகளை முடிவு செய்யலாம் எனக்கூறி வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதி தள்ளிவைத்தனர்.

The post 49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்கும் முதல்வரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Governor ,CM ,Tamil Nadu Government ,Chennai High Court ,Chennai ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...