×

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி; பூங்கா ஆக்கிரமிப்புகள் அகற்ற தீவிரம்: அதிகாரிகள் அதிரடி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள 8, 9 மற்றும் 10 ஆகிய வார்டுகளில் குடியிருப்போர்களுக்கு சிறுவர் பூங்காவுக்கென்று 67 ஏர்ஸ், அதாவது ஒரு ஏக்கர் 65 சென்ட் நிலம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்டது. இதனை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து, அதன் மூலம் பிளாட் போட்டு லட்ச கணக்கில் விற்றுவிட்டதாகவும், அதில் சாட்சி பிள்ளையார் கோவில், மசூதி, சர்ச் மற்றும் தனியார் மழலையர் பள்ளி ஆகியவற்றை கட்டி விட்டதாகவும் எனவே, பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் கூறினர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து, அன்னை அஞ்சுகம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்து, வந்த நீதிபதிகள் பூங்காவுக்கு என்று ஒதுக்கிய இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி வருவாய் துறை அதிகாரிகளுக்கு கடந்த வாரம் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். அதன்பேரில், செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் இந்துபாலா தலைமையிலும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட ஊராட்சிகளின் கூடுதல் இயக்குனர் உமா, தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், வெங்கட்டராகவன் ஆகியோர் முன்னிலையிலும் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி, அதிமுக துணை தலைவர் ரேகாகார்த்திக் மற்றும் வார்டு கவுன்சிலர் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில்,அன்னை அஞ்சுகம் நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு தொடர்ந்தவருக்கும், சங்கத்துக்கும் தொடர்பே இல்லை. மேலும், வழக்கு தொடர்ந்தவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை. இதில், பூங்காவுக்கு என்று ஒதுக்கிய இடத்தில் சாட்சி பிள்ளையார் கோயில், மசூதி, சர்ச் மற்றும் மழலையர் பள்ளி ஆகியவை அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில்தான் உள்ளது. இதில் தனிநபர் ஆக்கிரமிப்புகள் இல்லை. எனவே, அனைத்து தரப்பினரும் வழிபடும் வகையில் உள்ள மத ஸ்தலங்களையும், பள்ளியையும் இடிக்கவிடமாட்டோம். இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்’ என்றர். இதற்கு பதிலளித்து அதிகாரிகள் கூறுகையில், இதில் நீதிமன்ற உத்தரவை நாங்கள் செயல்படுத்தியே தீருவோம். எனவே, வருகிற 7ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்று உறுதிபட கூறினர். இதில் தொடர்ந்து 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையால் ஊரப்பாக்கம் ஊராட்சியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி; பூங்கா ஆக்கிரமிப்புகள் அகற்ற தீவிரம்: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Kooduwancheri ,Chengalpattu District ,Kattankolathur Union ,Vandalur ,Iyangeri ,Klambakkam ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல் மழை பாதிப்பால்...