
- கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
- மாவட்ட நிர்வாகக் குழு
- மதுராந்தகம்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
மதுராந்தகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த போவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரணி தலைமை தாங்கினார். வட்டார பொருளாளர் பன்னீர் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குணசேகரன் அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் பவுல்ராஜ், மாவட்ட இணை செயலாளர்கள் ராஜசேகரன், சைமன், உதவி திட்ட அலுவலர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் பெரியசாமி, பாலு, சுதர்சன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செங்கல்பட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் ஊராட்சி செயலர்கள் பணியிடத்தை விரைந்து நிரப்பிட தமிழக அரசை வலியுறுத்தியும், ஊராட்சி செயலர்களுக்கு 2020-21 மற்றும் 2022 -23 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான பதவி உயர்வு 8 ஊராட்சி செயலர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பிரிவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்த 14 கணினி உதவியாளர்களை எந்த அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பணி வழங்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் தூய்மை பாரத இயக்கம் மற்றும் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் பணி புரியும் கணினி உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18000 வழங்க வேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில மையத்தின் முடிவின்படி 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறையில் வருகின்ற 13.9.2023 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம்: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.