×

ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு; பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை: முன்விரோதம் காரணமா என விசாரணை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர் எபினேசன் (32). பிரபல ரவுடி. இவன் மீது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், நேற்று மாலை ஆட்டோவில் தண்டலம் – பேரம்பாக்கம் சாலை வழியாக மண்ணூர் கூட்டுச்சாலையில் இருந்து மேவளூர்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மண்ணூர் அருகே சென்றபோது எதிர் திசையில் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் எபினேசர் சென்ற ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் எபினேசன் ஆட்டோ விட்டு வெளியேறி சாலையில் ஓட தொடங்கினான். இதனை கண்ட மர்ம கும்பல், எபினேசனை பிந்தொடர்ந்து விரட்டி சென்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.

இதில் சாலை ஓரமாக வயல்வெளியில் இறங்கி ஓடத் தொடங்கிய எபினேசன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல் வீச்சரிவால், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் எபினேசன் தலையில் வெட்டி சிதைத்தனர். இதில் தலை முழுவதும் சிதைந்து எபினேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச்சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் எபினேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தியதில், வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சார்ந்த ஆனந்தன் என்பவனை கடந்த 2020ம் ஆண்டு நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்தது தெரிவானது. மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல் விடுத்தது, கட்டபஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவன் மீது பதிவாகி உள்ளது தெரிய வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் எபினேசன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.

மேலும், சிறையில் இருந்து வெளியே வந்த எபினேசன் திருமழிசை, பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் ரவுடிகளுடன் சேர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பழிக்கு, பழியாக எபினேசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் பட்டபகலில் ரவுடியை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு; பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை: முன்விரோதம் காரணமா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Bustle ,Sriperumbudur ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு