×

அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் பல்கலையில் முறைகேடு ஐஏஎஸ் அதிகாரி விசாரணை: ஆவணங்கள் ஒப்படைப்பு

வேலூர்: வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அதிமுக ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக நேற்று உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் எம்.இளங்கோவன் ஹென்றி தாஸ் விசாரணை நடத்தினார். வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அதிமுக ஆட்சியின்போது பணி நியமனங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கியது என கோடிக்கணக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மற்றும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி என 2 நாட்கள் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் திருப்தி இல்லை என்று ஏற்கனவே இதுதொடர்பாக ஓய்வு பெற்ற பேராசிரியர் ஐ.இளங்கோவன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே இருந்த விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு அவருக்கு பதில் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் எம்.இளங்கோவன் ஹென்றி தாஸ் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தனது விசாரணையை மேற்கொண்டார். அப்போது அவரிடம் ஓய்வு பெற்ற பேராசிரியர் இளங்கோவன் தனது தரப்பிலான ஆவணங்களை சமர்ப்பித்தார். தொடர்ந்து கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பணி நியமனங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் உட்பட பல்கலைக்கழகத்துக்கு தேவையான பொருட்கள் கொள்முதல், மதிப்பெண் சான்றிதழ்கள் தொடர்பாக பல்கலைக்கழகம் தரப்பில் உள்ள ஆவணங்களையும் விசாரணை அதிகாரி பெற்றுள்ளார்.

இருதரப்பு ஆவணங்களை வைத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த அறிக்கை புகார்தாரரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஆட்சேபம் ஏதாவது இருந்தால் அதுவும் பெறப்படும் என்றும், இதையடுத்து இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, இவ்விஷயம் தொடர்பாக நடந்து வரும் வழக்குக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

The post அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் பல்கலையில் முறைகேடு ஐஏஎஸ் அதிகாரி விசாரணை: ஆவணங்கள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : IAS ,Tiruvalluvar University ,Vellore ,Additional ,M. Elangovan ,
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை