×

வெடிமருந்து குடோனில் ஆய்வு செய்த அதிகாரிகள்

தர்மபுரி, செப்.6: இண்டூர் அருகே உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக கூறி வெடிமருந்து குடோனுக்கு செல்லும் சாலையை பொதுமக்கள் துண்டித்த நிலையில், நேற்று அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரித்தனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா இண்டூர் அருகே ராமர்கூடல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெடிமருந்து குடோன் 10 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வெடி மருந்து குடோன் உரிய அனுமதியின்றி இயங்குவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குற்றம்சாட்டினர். மேலும், வெடிமருந்து குடோனுக்கு செல்லும் சாலையை நேற்று முன்தினம் பொக்லைன் கொண்டு குழி தோண்டி துண்டித்தனர். இதுகுறித்து மூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின்பேரில் நேற்று காலை நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், பிடிஓ லோகநாதன், வனக்காப்பாளர்கள் ரேவதி, தமிழரசி, இண்டூர் போலீஸ் எஸ்ஐ பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெடி மருந்து குடோனை ஆய்வு செய்தனர்.

சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளரிடம் லைசென்ஸ் குறித்த ஆவணங்களை கேட்டு பெற்று சரிபார்த்தனர். இதுகுறித்து நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம் கூறுகையில், ‘இண்டூர் அருகே ராமர்கூடல் பகுதியில் உள்ள மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வெடிமருந்து குடோனுக்கான லைலென்ஸ் சான்றுகளை ஆய்வு செய்தோம். வரும் 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை லைசென்ஸ் அனுமதியளித்து வேலூர் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் சான்று வழங்கப்பட்டுள்ளது’ என்றனர். இதையடுத்து, வெடிமருந்து குடோனுக்கு செல்லும் சாலையில் தோண்டப்பட்ட குழி மூடப்பட்டு, சரி செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி வனப்பகுதியில் குழி தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வெடிமருந்து குடோனில் ஆய்வு செய்த அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Indore ,Dinakaran ,
× RELATED இண்டூரில் தண்ணீர் பந்தல் திறப்பு