×

ஆவடி பகுதியில் நிற்காமல் செல்லும் பேருந்தால் மக்கள் அவதி: பணிமனை நிலைய மேலாளரிடம் புகார்

ஆவடி: ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்து நிற்காமல் செல்வதால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பணிமனை நிலைய மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆவடியை அடுத்து திருநின்றவூர், வச்சலாபுரத்தைச் சேர்ந்தவர் பழனி (62). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி அளவில், ஆரணிக்குச் செல்ல, ஜெயா கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். பேருந்துக்காக காத்திருந்தபோது, ஆவடியில் இருந்து ஆரணி செல்லும் தடம் எண் 580 பேருந்து, அங்கு நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் உடனே தனது மகன் லோகநாதனை தொடர்பு கொண்டு வரவழைத்து, ஆட்டோ மூலம் பேருந்தை பின் தொடர்ந்தார்.

இதில், மூன்று பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் சென்ற பேருந்து, பாலாஜி நகர் அருகே நிறுத்தப்பட்டது. முதியவர் உடனே, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேருந்து ஏன் நிறுத்தத்தில் நிற்கவில்லை என கேள்வி கேட்டுள்ளார். அப்போது முதியவர் என்றும் பாராமல் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் தகாத வார்த்தையால் பழனியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர், ஆவடி பேருந்து பணிமனைக்குச் சென்று, டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் மீது, பணிமனை மேலாளர் யுவராஜிடம் புகார் அளித்துள்ளார். அதனைப் பெற்று கொண்ட மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. சரிவர நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம். மேலும், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் அடுத்த பேருந்து வரும் வரை வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக ஆவடி பேருந்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் அனைத்து மாநகர பேருந்துகளும் சரிவர சுத்தம் செய்யாமல் இயக்கப்படுகின்றன. இதனை கண்காணித்து பேருந்துகளை சுத்தம் செய்ய வேண்டும். இது சரிசெய்யப்படவில்லை எனில் பயணிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது என்றனர்.

The post ஆவடி பகுதியில் நிற்காமல் செல்லும் பேருந்தால் மக்கள் அவதி: பணிமனை நிலைய மேலாளரிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,Arani ,
× RELATED ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றம்