பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கால்கள் நசுங்கி பெண் பரிதாபமாக பலியானார். பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி ரேவதி (53). இவர் பூந்தமல்லி – பாரிவாக்கம் சந்திப்பு, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற லாரி ரேவதி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இரு கால்கள் நசுங்கி ரேவதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனை அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்துக்கு காரணமான லாரியை சிறை பிடித்து, சம்பவ இடத்திற்கு லாரியின் உரிமையாளர் வரவேண்டும், இதுபோன்ற விபத்துகள் இனி நடக்க கூடாது என அதன் உரிமையாளர் போலீசாரிடம் எழுதி கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் ரேவதி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில், ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கால்கள் நசுங்கி பெண் பரிதாப பலி: டிரைவர் கைது appeared first on Dinakaran.