×

பார்வையற்ற தம்பதியரின் நகைகளை எடுத்துச்சென்ற ஆட்டோ டிரைவர் கைது

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல், ஜானகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (47). இவர் மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவானி (40). இவர்கள் பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் ஆவர். இந்த தம்பதியினர் சென்னை தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். அவ்வாறு கட்டிய பணத்திலிருந்து நேற்று முன்தினம் 5 சவரன் நகைகளை வாங்கி கொண்டு மதுரவாயல், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் சென்றனர்.

வீட்டிற்கு வந்தபிறகுதான் தங்களது நகைகள் மற்றும் செல்போன் ஆகியவை மாயமானது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது தாங்கள் வந்த ஆட்டோவில் நகை மற்றும் செல்போனை தவற விட்டது தெரிய வந்தது. புகாரின்பேரில், மதுரவாயல் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் வந்த ஆட்டோவில் நடிகர் அஜித் படம் ஒட்டப்பட்டு இருந்தது‌. இந்த அடையாளத்தை வைத்து அந்த ஆட்டோவை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்பவர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீனதயாளனை பிடித்து விசாரித்தனர். அதில், பார்வையற்ற தம்பதியினர் ஆட்டோவில் தவறவிட்ட நகை, செல்போன் ஆகியவற்றை அவர் எடுத்து வைத்துக்கொண்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்து நகை, செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து பார்வையற்ற தம்பதியிடம் ஒப்படைத்தனர்.

The post பார்வையற்ற தம்பதியரின் நகைகளை எடுத்துச்சென்ற ஆட்டோ டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Marichami ,Janaki Nagar, Maduravayal, Chennai ,Mylapore ,
× RELATED அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்