×

வெள்ளானூர் ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் பணி

ஆவடி: ஆவடியை அடுத்த வெள்ளனூர் ஊராட்சி அலுவலகம் பின்புறத்தில் பிள்ளையார் கோயில் தெரு உள்ளது. இந்த தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை நீர் வடிகால்வாய் திட்டங்களுக்கான பணிகள் நடந்து வந்தன. இங்கு குழிகள் தோண்டப்பட்டு, அது முழுமையாக மூடப்படாமல் பாதியிலேயே விடப்பட்டுள்ளது. தற்போது, பணிகள் கிடப்பில் போடப்பட்டு சுமார் 3 மாதமாகிறது. இந்நிலையில், வீடுகளில் இருந்து வெளியில் வருவதற்காக பலர் மரப்பலகை வைத்து நடந்து வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், முதியவர்கள் மரப்பலகை வழியாக நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.

பலர் கால்வாயில் விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் பலகையில் நடக்கும் போது நடுக்கம் ஏற்படுகிறது. ஒரு சில நேரத்தில் மரப்பலகையில் இருந்து கீழே விழும் சூழ்நிலையும் உள்ளது. தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், உடனடியாக மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலதாமதம் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வெள்ளானூர் ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் பணி appeared first on Dinakaran.

Tags : Vellanur panchayat ,Avadi ,Pilliyar Koil Street ,Vellanur ,Panchayat ,Office ,Vellanoor Panchayat ,Dinakaran ,
× RELATED மின் வயர்கள் திருட்டு