×

இலை கட்சியில் கட்டம் கட்டப்படும் மாஜி அமைச்சர் கலங்கி போய் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘உ யரதிகாரிகள் எச்சரித்தும், கொலையை தடுக்காமல் சமசரம் பேசிய போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கதி இப்படி ஆகிப் போச்சே..’’ என்று கேட்டவாறு வந்தார் பீட்டர் மாமா.
‘‘அல்வா மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவத்தில் முக்திதலம் பெயரைக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். சஸ்பெண்ட் ஆக அவரின் அலட்சியமே காரணம் என்கிறார்கள் காவல் துறையில் அவருடன் பணியாற்றுபவர்கள். அதாவது, இந்தக் கொலை சம்பவத்துக்கு முன்பே உளவுத்துறை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டருக்கு எச்சரிக்கை விடுத்ததாம். அது மட்டுமல்லாது காவல் துறை உயரதிகாரிகள் கொலையாளியையும், கொலை செய்தவரையும் பிடித்து உள்ளே அடைக்க உத்தரவிட்டிருந்தனராம். இவ்வளவு எச்சரிக்கை விடுத்தும் அந்த ஊரின் ஏசியும், இன்ஸ்பெக்டரும் மெத்தனமாக இருந்தனராம். சாதாரண கேஸ் போல விசாரிச்சு ரெண்டு தரப்பிலேயும் எழுதி வாங்கிட்டு அனுப்பிட்டாங்களாம். இவர்கள் விசாரித்து அனுப்பிய மறுநாளே கொலை நடந்திருக்கு… இதனால் உள்ளூர் போலீசார் மீது நடவடிக்கை பாயும் என்பது முன்கூட்டியே நான் கணித்திருந்தேன். இந்நிலையில் பாளையங்கோட்டையில் பணியில் இருந்த அந்த ஸ்டேஷன் அதிகாரி சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார். கொலை நடந்து எதிரிகள் கைது செய்யப்பட்ட நிலையிலும், இந்த வழக்கில் இன்னும் யார் மீது நடவடிக்கை பாயுமோ என போலீஸ் தரப்பில் பதற்றம் போகலையாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எலக்‌ஷன் சீட்டுக்காக சொந்த மாவட்டத்தை விட்டு ஓடும் இலை கட்சி மாஜி அமைச்சரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குக்கர்காரர், தேனிக்காரர் ஆகிய இரண்டு அணிகளின் முக்கிய தலைமைகளை இலை கட்சியில் தூக்கி வீசினார் சேலம்காரர். இதனால் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பார்முலா படி மாம்பழ தலைவருக்கு எதிராக இரண்டு தலைகளும் கைகோர்த்துள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களில் சேலம்காரர் நுழையாதபடி பார்த்து கொள்ளும் பொறுப்பை தேனிக்காரர் ஏற்றுள்ளாராம். அதற்கு குக்கர்காரர் முட்டு கொடுத்து வருகிறாராம். இதில் முதல் கட்டமாக, மனுநீதி சோழன் மாவட்டத்தில் சேலம்காரர் அணியில் உள்ள மாஜி அமைச்சருக்கு எதிராக தேனிக்காரர், குக்கர்காரரின் ஆதரவாளர்கள் களம் இறங்கி இருக்காங்க. இவங்க இலை தலைமையை விட இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘ராஜை’ எதிர்ப்பதில்தான் தீவிரமாக இறங்கி இருக்காங்களாம். இந்த தகவல் தெரிந்து சுதாரித்துக் கொண்ட மாஜி அமைச்சர் ‘ராஜ்’ இந்தமுறை தோல்வி பயத்தில் இரண்டு ஆண்டுக்கு பிறகு வரும் சட்டமன்ற தேர்தலில் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம். அதற்காக தொகுதியில் தங்கும் முடிவில் உள்ளாராம். இதற்காக மேலிடத்தில் தற்போது இருந்தே காய் நகர்த்தி வருகிறார். அதற்கு சேலம்காரரோ, முதலில் நாடாளுமன்ற தேர்தல் முடியட்டும், அப்புறம் சட்டமன்ற தொகுதி குறித்து பேசிக்கலாம் என்று திருப்பி அனுப்பிவிட்டாராம். என்ன சேலம்காரர் ஓகேன்னு சொல்லாமல் தட்டி கழிக்கிறாரே, நம்மை ஓரம் கட்டுகிறாரோ என்ற சந்தேகத்தில் உள்ளாராம். டெல்டா மாவட்டத்தில் தற்போது இதுதான் பேச்சாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓய்வுபெற்ற பெற்ற பிறகு தன் வசூல் ராஜ்ஜியத்தை விரிவாக்கிய நபரை பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அரசம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக ஐந்து எழுத்து பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரிடையர்டு ஆகிட்டாராம். ஆனாலும், இதுநாள் வரை இவர்தான் அரசம்பாளையம் கிராம நிர்வாக அலுலகத்தில் தான் எப்போதும் இருந்து வருகிறாராம். அலுவலக சாவி, பதிவரை சாவி, ஊராட்சியின் பட்டா, சிட்டா, அடங்கல் ஆவணங்கள் என அனைத்தும் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்காம். எங்கெங்கு வருமானம் கிடைக்கும், கல்குவாரி உரிமையாளர்கள் மாமுல் எவ்வளவு கொடுப்பார்கள் என்பது உள்பட அனைத்து விஷயங்களிலும் இவர் கில்லாடி என்பதால் எந்த கிராம நிர்வாக அலுவலர் வந்தாலும் இவரை வைத்தே பணிகளை கவனிக்கிறாங்களாம். விஏஓவும் பிரச்னையில் சிக்க கூடாது என்ற உஷார் பேர் வழியாம். எல்லாம் ஓய்வு பெற்றவர்கள் தரும் கமிஷன் பணத்தில் சரிபாதி கிடைப்பதால் கிராமத்து அதிகாரியும் ஓய்வு பெற்ற நபரை தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு கல்லா கட்டி வருகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெயிலூர்ல நடந்த பல கோடி மோசடியின் பின்னணி என்ன…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மங்களூர் டூ விழுப்புரம் செல்லும் என்எச், வெயிலூர் மாவட்டத்தை கடந்து தான் போகுது. இந்த வழித்தடத்துல, சாலைய அகலப்படுத்த, என்எச் சார்புல சாலையோட இருபுறங்களை அகலப்படுத்தி, நடைபாதையோட கூடிய தடுப்பு வேலிகளை ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி அமைச்சாங்க. சாலையை அகலப்படுத்தி, சாலையின் இருபுறமும் நடைபாதையுடன் கூடிய தடுப்பு வேலி அமைக்க 35 சி நிதி ஒதுக்கீடு செஞ்சாங்களாம். நிதி என்னமோ சரியாத்தான் ஒதுக்கியிருக்காங்க. ஆனா ஒதுக்குன நிதியில அதிகாரிங்க கை வெச்சிருக்காங்க. அதாவது, நடைபாதையோட அளவு குறைச்சும், தடுப்பு வேலி உயரத்த குறைச்சும் 1.11 கோடி மோசடி நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்திருக்காம். அதோடு விஜிலென்ஸ் கண்லயும் பட்டிருக்கு. இதனால அவங்க, சம்மந்தப்பட்ட பொறியாளரு, உதவி பொறியாளருங்க 2 பேரு, ஒப்பந்தக்காரர்னு விசாரணையை தொடங்கியிருக்காங்க. அதோட சமீபத்துல நடத்துன ஆய்வுல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்குதாம். இதனால முறைகேடுல ஈடுபட்டவங்க அச்சத்துல இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொகுப்பூதியம் வாங்கும் ஆசிரியர்களிடம் கை நீட்டும் அதிகாரி யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வட மாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தின் ஆரம்ப கல்வித்துறையில் முத்தானவர் அதிகாரியாக இருக்கிறார். பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டதையடுத்து ஒரு பணிக்கு அரை லகரம் வரையிலும் வாங்கி வசூல் வேட்டை நடத்துவதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது. பணி வரன்முறை செய்தல், தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்குவது, அரசு உதவி பெறும் பள்ளி முகவாண்மை மற்றும் செயலாளர் புதுப்பித்தல் என எதை எடுத்தாலும் ரேட் நிர்ணயம் செய்து, வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக ஆசிரியர்களே துறைத்தலைமை அதிகாரிகளுக்கு புகார்களை தட்டி விட்டிருக்காங்களாம். விரைவில் நடவடிக்கை பாயும் என்று அந்த மாவட்ட ஆசிரியர்கள் மத்தியில் இதுதான் பேச்சாக இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சியில் கட்டம் கட்டப்படும் மாஜி அமைச்சர் கலங்கி போய் இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji Minister ,Leaf Party ,wiki Yananda ,Gathi Kathi ,Samasaram ,
× RELATED அதிமுக மாஜி அமைச்சர் காமராஜுக்கு...