×

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடர் இந்திய அணியில் ராகுல்: பிரசித், திலக் நீக்கம்

மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிய கோப்பையில் விளையாடி வரும் அணியில் இடம் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, மாற்று வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை தொடர் அக்.5ம் தேதி தொடங்கி நவ.19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான அணிகளை அறிவிப்பதற்கான கெடு நேற்றுடன் (செப். 5) முடிவடைவதாக ஏற்கனவே அற்விக்கப்பட்டிருந்த நிலையில், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கூடி இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர். இந்த கூட்டத்தில் கேப்டன் ரோகித் ஷர்மாவும் கலந்து கொண்டார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகர்கர், உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தார். ரோகித் ஷர்மா தலைமையில் மொத்தம் 15 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையில் தற்போது விளையாடிக் கொண்டு இருப்பவர்களில் 15 பேர் உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளனர்.

முழு உடல்தகுதியை நிரூபித்து! ஆசிய கோப்பைக்கான அணியில் இடம் பெற்றும், இன்னும் களமிறங்காமல் இருக்கும் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆல் ரவுண்டர்கள் அக்சர், ஜடேஜா மற்றும் குல்தீப் சுழற்பந்துவீச்சுக்கு பொறுப்பேற்கின்றனர். அனுபவ ஆல் ரவுண்டர் அஷ்வின், சாஹல் சேர்க்கப்படாததுடன், விக்கெட் கீப்பர்/ அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அதே சமயம் ஒருநாள் போட்டிகளில் பெரிதும் சோபிக்காத சூரியகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ள திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டுள்ளனர். அணிகளை அறிவிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிந்தாலும், செப். 28 வரை ஐசிசி ஒப்புதல் பெறாமலேயே அணியில் மாற்றங்களை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று மற்றும் பைனலில் வீரர்களின் செயல்பாடுகளை பொறுத்து, உலக கோப்பைக்கான அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. உலக கோப்பையில் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்.8ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

* இந்தியா
ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராத் கோஹ்லி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

The post ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடர் இந்திய அணியில் ராகுல்: பிரசித், திலக் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Prasith ,Tilak ,ICC World Cup ODI series ,Mumbai ,Indian squad ,ICC World Cup ODI ,Rohit Sharma ,Dinakaran ,
× RELATED அவதூறு வழக்கு ராகுலுக்கு சம்மன்