×

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: நான்கரை மணி நேரம் போராடி சின்னரை வீழ்த்தினார் ஸ்வெரவ்; கின்வென்னிடம் ஜெபர் தோல்வி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இத்தாலியின் யானிக் சின்னருடன் மோதிய ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 4 மணி, 41 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள யானிக் சின்னருடன் (22 வயது) 4வது சுற்றில் மோதிய ஸ்வெரவ் (26 வயது, 12வது ரேங்க்) 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். சின்னர் 2வது செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது செட்டை ஸ்வெரவ் 6-2 என்ற கணக்கிலும், 4வது செட்டை சின்னர் 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்ற இழுபறி நீடித்தது.
5வது மற்றும் கடைசி செட்டில் சின்னரின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஸ்வெரவ் 6-4, 3-6, 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 41 நிமிடத்துக்கு நீடித்து ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. நம்பர் 1 வீரர் கார்லோஸ் அல்கராஸ், ரஷ்ய வீரர்கள் மெத்வதேவ், ஆந்த்ரே ருப்லேவ் ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் சீனாவின் கின்வென் ஸெங்குடன் (20 வயது, 23வது ரேங்க்) மோதிய துனிசியா நட்சத்திரம் ஆன்ஸ் ஜெபர் (29 வயது, 5வது ரேங்க்) 2-6, 4-6 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா (3வது ரேங்க், 29 வயது) 1-6, 3-6 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை மேடிசன் கீஸிடம் (28 வயது, 17வது ரேங்க்) தோல்வியைத் தழுவினார். கின்வென், கீஸ், முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா (பெலாரஸ்), மார்கெடா வோண்ட்ருசோவா (செக்.) ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ்: நான்கரை மணி நேரம் போராடி சின்னரை வீழ்த்தினார் ஸ்வெரவ்; கின்வென்னிடம் ஜெபர் தோல்வி appeared first on Dinakaran.

Tags : US Open Tennis ,Zverev ,Sinner ,Jaber ,Kinwenn ,New York ,US Open Grand Slam ,Germany ,Yannick Schinner ,Italy ,Schinner ,Geber ,Kinvenn ,Dinakaran ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் யானிக் சின்னர் சாம்பியன்