×

அண்ணா பல்கலை 43வது பட்டமளிப்பு விழா 1,25,113 பேருக்கு பட்டம்: 1,550 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 43வது பட்டமளிப்பு விழாவில் 1,25,113 பேர் பட்டம் பெற்றனர். மேலும் 1,550 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி கவுரவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 43வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வித்துறை ஆணையர் கார்த்திக், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கலந்து கொண்டனர். விழாவில் நேரடியாக 1,550 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இவர்களில் தங்கப்பதக்கம் வென்ற மாணாக்கர்கள் 65 பேர், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 1485 பேர். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மாணவர்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 1,25,113 பேர் பட்டம் பெற்றனர்.

முன்னதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி கூறியதாவது: நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி 2015-16 மற்றும் 2019-21 ஆண்டுகளில் 135.5 மில்லியன் இந்தியர்கள் வறுமை கோட்டிற்கு மேலே வந்துள்ளனர். பிரதமரின் விக்க்ஷித் பாரத் கனவு திட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டு இருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் உழைக்கும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி என சுயசார்பு நாடாக இந்தியா வளர்ச்சி அடையும். இந்திய இளைஞர்கள் ஆபத்தான சூழ்நிலைகளைக் கண்டு பயப்படுவதில்லை என்பதை கண்டு பிரதமர் பெருமை கொள்கிறார்.

எங்கள் தலைமுறையில் அது குறைவாக இருந்தது. நம் நாட்டின் கலாச்சாரமும், குடும்பக் கட்டமைப்பும் நம்மை அதற்கு தயார்படுத்தியுள்ளது. மாநிலங்கள் விருப்பப்பட்டால் மாநில பல்கலைக்கழகங்களை மேம்படுத்த பயன்படுத்திக்கொள்ள 2022 முதல் 2025 வரையிலான ஆண்டுகளுக்கு ரூ.238 கோடி ஒதுக்கியுள்ளது. நிதி ஆயோக் மூலம் தேசிய தகவல் ஆய்வு மையத்தை உருவாக்கியுள்ளோம். இதனை மாநில உதவித் திட்டம் மூலம் மாநிலங்கள் பயன்படுத்திக்கொண்டு மாநில தகவல் ஆய்வு மையங்களை உருவாக்கவேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post அண்ணா பல்கலை 43வது பட்டமளிப்பு விழா 1,25,113 பேருக்கு பட்டம்: 1,550 பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Anna University ,43rd Convocation Ceremony ,Governor RN ,Ravi ,Chennai ,Governor ,Anna ,University 43rd Convocation Ceremony ,Governor RN Ravi ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வை...