×

அரசின் தகவல் தளத்தை அணுகி 2 லட்சம் போலி ஆதார், பான் கார்டு தயாரித்து தலா ரூ.15க்கு விற்பனை: தேச பாதுகாப்பு அச்சுறுத்தல் என போலீசார் எச்சரிக்கை

சூரத்: ஆதார் அட்டை மூலம் மக்களின் தனிநபர் தகவல்கள் கசிய வாய்ப்பில்லை, அவை முழு பாதுகாப்பில் இருப்பதாக ஒன்றிய அரசு கூறி வரும் நிலையில், அரசின் தகவல் தளத்தை சட்டவிரோதமாக அணுகி, அதன் மூலம் 2 லட்சம் ஆதார், பான் கார்டு தயாரித்த 2 பேர் சூரத்தில் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த தனியார் வங்கி ஒன்று கடன் பெற்று அதை செலுத்தாதவர்கள் போலியான ஆதார், பான் கார்டு கொடுத்திருப்பதாக போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்து விசாரித்தனர். அவர்களில் பிரின்ஸ் ஹேமந்த் பிரசாத் என்பவர் இணையதளம் ஒன்றின் மூலமாக போலி ஆதார், பான் கார்டு பெற்றதாக திடுக்கிடும் தகவலை கூறி உள்ளார்.

அந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட பயனர் முகவரி மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி, தலா ஒரு ஆவணத்திற்கு ரூ.15 முதல் ரூ.50 வரை செலுத்தி போலி ஆதார், பான் கார்டு பெற்றதாக கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்மந்தப்பட்ட இணையதளத்தை ஆய்வு செய்தனர். அந்த இணையதளத்தை நடத்திய ராஜஸ்தான் கங்கா நகரை சேர்ந்த சோம்நாத் பிரமோத்குமார், உபியின் உன்னாவ் பகுதியை சேர்ந்த பிரேம்விர்சின் தாகூர் ஆகிய இருவரை கைது செய்தனர்.

இவர்கள், அரசின் தகவல் தளத்தை மோசடியான பயனர் முகவரி மற்றும் பாஸ்வேர்டு மூலமாக அணுகி அதிலிருந்து தகவல்களை திருடி உள்ளனர். அந்த தகவல்களை வைத்து, ஆதாருடன் இணைக்கப்பட்ட பான் எண்களையும் வாக்காளர் அடையாள அட்டை எண்களையும் திருடி உள்ளனர். பின்னர் அந்த தகவல்களை வைத்து போலி ஆதார், பான் கார்டுகளை தயாரித்து தந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆதார், பான் கார்டுகளை இவர்கள் போலியாக தயாரித்துள்ளனர். இந்த போலி ஆவணங்களுக்கு ரூ.15 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலித்துள்ளனர். இந்த போலி ஆவணங்களை கடன் பெறுவது, செல்போன் சிம் கார்டு வாங்க பயன்படுத்தி உள்ளனர். இந்த ரகசிய இணையதளம் 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. மோசடியில் ஈடுபட்ட சோம்நாத் 5ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

The post அரசின் தகவல் தளத்தை அணுகி 2 லட்சம் போலி ஆதார், பான் கார்டு தயாரித்து தலா ரூ.15க்கு விற்பனை: தேச பாதுகாப்பு அச்சுறுத்தல் என போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union government ,
× RELATED கொலிஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகளை...