×

கைதிக்கு கஞ்சா சப்ளை சிறை காவலர் சஸ்பெண்ட்

சென்னை: புழல் சிறையில் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த சிறை காவலர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புழல் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை பிரிவுகளில் 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடம் அடிக்கடி சோதனை நடத்தும்போது, போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு வருகிறது. மேலும், சிறைக்குள்ளேயே கைதிகள் பயன்படுத்திவரும் செல்போன்கள், சிம் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பலகட்ட பாதுகாப்புகளையும் தாண்டி, போதை பொருட்கள் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவை கைதிகளுக்கு எப்படி செல்கிறது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். ரகசியமாகவும் கண்காணிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஆல்வின் என்பவர் ரூ.1500 கோடி மோசடி வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரிடம் சிறை காவலர்கள் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள், கஞ்சா வைத்திருப்பதை கண்டுபிடித்து, அவரிடம் இருந்து 6 போதை மாத்திரைகள், 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், சிறை காவலர் திருமலை நம்பி ராஜாதான் தன்னிடம் கஞ்சா வழங்கினார் என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், சிறைத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜ், புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன்படி ஆல்வின், சூர்யா, அருண், ஆனந்தன், இருதயராஜ், ஜெபீர் ஆனந்த் ஆகிய 6 கைதிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த சிறை காவலர் திருமலை நம்பிராஜாவை சிறைத்துறை அதிகாரிகள் தற்காலிமாக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை எங்கிருந்து வாங்கி வரப்பட்டது, எவ்வளவு தொகைக்கு வாங்கினார் என்பது குறித்தும், வேறு காவலர்களுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கைதிக்கு கஞ்சா சப்ளை சிறை காவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Puzhal Jail ,Puzhal Central Jail ,
× RELATED புழல் சிறையில் சிறை காவலர்கள்...