×

முழுவதும் ஏசி, மல்டி லெவல் பார்க்கிங், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகளுடன் விமான நிலைய தரத்தில் அமைக்கப்படும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

சென்னை: விமான நிலைய தரத்தில் புதிதாக அமைக்கப்படும் குத்தம்பாக்கம் பேருந்து முனையத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் குறித்து அமைச்சர் சேகர்பாபு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து முனையம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கிருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட மேற்கு பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 130க்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தும் வகையிலான இடவசதியுடன் இந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, மேலும் 1600க்கும் மேற்பட்ட பைக்குகள் மற்றும் 200 கார்கள் நிறுத்த ஏதுவாக மல்டி லெவல் பார்க்கிங் கட்டப்பட உள்ளன. நகரும் படிக்கட்டுகள், குடிநீர் வசதிகள், சிசிடிவி கேமரா கண்காணிப்பு உள்ளிட்ட வசதிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. விமான நிலைய தரத்தில் இந்த பேருந்து முனையம் கட்டப்படுகிறது. பேருந்து முனையம் முழுவதும் ஏசி வசதி, இலவச வைபை வசதி என அனைத்து வசதிகளுடன் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து ஐடி ஊழியர்கள் அதிகளவில் பெங்களூரு செல்வதால், இந்த பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு வந்தால் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். வருங்காலத்தில் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டால், குத்தம்பாக்கம் வழியாக மெட்ரோ சேவை வரவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த புதிய பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ ஆய்வு கூட்டரங்களில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்தது. இதில், பேருந்து முனையத்தில் மாநகர பேருந்துகள் நிறுத்தம், புறநகர் பேருந்துகள் நிறுத்தம், பேருந்துகளை பராமரிப்பதற்கான பணிமனை, தனியார் பேருந்துகள் நிறுத்தம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மருத்துவ மையம், தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, ஏடிஎம், பொருள் பாதுகாப்பு அறை, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை, காவல் நிலையம், கடைகள், கழிவறைகள் மற்றும் நுழைவாயில் வளைவு அமைத்தல் போன்ற வசதிகள் அமைக்கப்பட உள்ளது தொடர்பாகவும் அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளிடையே ஆலோசனை மேற்கொண்டார்.

அதேபோல, கோயம்பேட்டில் இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும், அங்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, காவல் பணிகள், மருத்துவ மையம், குழந்தைகளுக்கான பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாப்பு வசதிகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதிகள், தீயணைப்பு வசதிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணைய சிறப்பு அதிகாரி ஜெயக்குமார், ஆவடி காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ஜெயலட்சுமி, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் குணசேகரன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன், போக்குவரத்து இணை ஆணையர் (சென்னை வடக்கு) ரவிச்சந்திரன், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய பொறியியல் இயக்குநர் ஜெய்கர் ஜேசுதாஸ், மாநகர போக்குவரத்து கழக பொது மேலாளர் செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* மெட்ரோ ரயில் சேவை
அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் பேருந்துகள் இங்கு இயக்கப்பட உள்ளன. மேலும் இங்கு உணவகங்கள், வணிக கடைகள் உள்ளிட்டவை அமைக்க சிஎம்டிஏ திட்டமிட்டுள்ளது. வருங்காலத்தில் பரந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டால் குத்தம்பாக்கம் வழியாக மெட்ரோ சேவை வர வாய்ப்புள்ளது.

The post முழுவதும் ஏசி, மல்டி லெவல் பார்க்கிங், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகளுடன் விமான நிலைய தரத்தில் அமைக்கப்படும் குத்தம்பாக்கம் புதிய பேருந்து முனையம்: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : New Bus Terminal ,Cuddapuck ,Minister ,Shekharbabu ,CHENNAI ,Cuthambakkam bus terminal ,
× RELATED நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி...