×

குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சமூக விரோதிகளின் செயல்பாடு இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: ஆவடி காவல் ஆணையர் உறுதி

திருவொற்றியூர்: செங்குன்றத்தில் நடந்த பொதுமக்கள்- காவல்துறையினர் கலந்தாய்வு கூட்டத்தில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சமூக விரோதிகளின் செயல்பாடுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறினார். ஆவடி காவல் ஆணையரகம், செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் பொதுமக்கள்- காவல்துறையினர் கலந்தாய்வு கூட்டம் செங்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் வியாபாரிகள் சங்கம், கிராமநல சங்கம், குடியிருப்போர் நல சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள், தன்னார்வலர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாலைகளை சீரமைத்தல், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது, போக்குவரத்து நிறைந்த சாலைகளில் சிக்னல் அமைத்தல் போன்ற பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து செங்குன்றம், சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுத்திடவும் எளிதில் குற்றவாளிகளை கண்டறியவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் நடைபாதை கடைகளை சீரமைப்பு செய்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்கவும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறுகையில், “செங்குன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும். குற்றச்சம்பவம் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். காவல் உதவி மையங்கள் அதிகளவில் மேம்படுத்தப்படும். மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றவுடன், மக்கள் தொகை கணக்கெடுப்பை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் சாலைகள் மேம்படுத்தப்படும்.

மேலும், சாலையோர கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்து நெரிசல்கள் குறைக்கப்படும். சமூக விரோதிகள் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும். சமூக விரோதிகளின் செயல்பாடுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான தண்டனை துரிதபடுத்தப்படும். காலியாக உள்ள இடங்களில் சமூகவிரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். இந்த குறை தீர்ப்பு ஆய்வுக் கூட்டம் பெயரளவு இல்லாமல் செயல்முறைப்படுத்தப்படும். காவல்துறையின் அனைத்து முயற்சிகளும் தொடரும்” என்றார்.

இக்கூட்டத்தில் செங்குன்றம் காவல் துணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர்கள் தட்சிணாமூர்த்தி, குமரேசன், கிரி, பிரமானந்தம், போக்குவரத்து உதவி ஆய்வாளர் மலைச்சாமி, கூடுதல் உதவி கமிஷனர்கள் அர்னால்ட், கனகராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி கருணாகரன், எம்எல்ஏக்கள் மாதவரம் சுதர்சனம், துரைசந்திரசேகர், திமுக புழல் ஒன்றியச் செயலாளர் சரவணன், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் சென்றம்பாக்கம் ராமு, தமிழ்ச்செல்வி, ரமேஷ், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் சரக காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் சமூக விரோதிகளின் செயல்பாடு இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்: ஆவடி காவல் ஆணையர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Avadi Police Commissioner ,Tiruvottiyur ,Senggunram ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...