×

இமாச்சல், கர்நாடகா தோல்வியால் அதிர்ந்து போன பா.ஜ: ஒரே நாடு, ஒரே தேர்தல் பணிகளை ஜூனில் தொடங்கிய ஒன்றிய அரசு; பரபரப்பான பின்னணி தகவல்கள் அம்பலம்

* மோடியின் அஜெண்டாவை செயல்படுத்திய அமித்ஷா
* இந்தியா கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சி
* ஜூன் 9 முதல் பணிகளை தொடங்கினார் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: இமாச்சல், கர்நாடகா தோல்வியால் அதிர்ந்து போன பிரதமர் மோடியின் உத்தரவுப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான பணிகள் ஜூன் மாதமே தொடங்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை சிதற வைப்பதற்குத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறிவந்தார். 2017ல் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 2018ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த பிரச்சினையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த முடிவு எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சூழலில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென ஒரே நாடு-ஒரே தேர்தல் நடைமுறையை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து ஒன்றிய அரசு கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டது. இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மக்களவைக்குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், 15வது நிதிக்குழு தலைவர் என்.கே.சிங், முன்னாள் மக்களவை பொதுச் செயலர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்தக் குழுவின் உயர்மட்ட கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் அடுத்தடுத்த அறிவிப்பால் எதிர்க்கட்சிகள் குழப்பிப்போய் விட்டன. திடீரென மோடி அரசு இத்தனை வேகம் எடுக்க காரணம் என்ன என்பது தெரியாமல் அவர்கள் திகைத்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த குழுவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அதே சமயம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்துவது குறித்தும், அதற்கேற்ப சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதற்கான இந்த குழுவில் தேர்தல் ஆணையர், முன்னாள் தேர்தல் அதிகாரிகள், நீதிபதிகள் ஆகிய எவரும் இடம் பெறவில்லை என்பது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

எதற்காக இந்த அவசரம் என்று ஆராய்ந்தால் இமாச்சலில் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பா.ஜ ஆட்சியை பறிகொடுத்ததும், அதை தொடர்ந்து கர்நாடகாவில் இந்த ஆண்டு மே 13ம் தேதி படுதோல்வி அடைந்ததும் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கர்நாடகா தோல்வியால் பிரதமர் மோடி மிகவும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். இந்த முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்கும் என்று அவர் கருதியிருக்கிறார். அதோடு பா.ஜவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வந்ததும் ஒரு காரணம். ஜூன் 9ம் தேதி முதல் கூட்டம் பாட்னாவிலும், 2வது கூட்டம் பெங்களூருவிலும், 3வது கூட்டம் ஆக.31, செப்.1ல் மும்பையிலும் நடந்து முடிந்து விட்டது.

காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி கைகோர்க்காது என்று மோடி எதிர்பார்த்தார். ஆனால் மூன்று கூட்டம் முடிந்த பிறகும் இந்தியா கூட்டணி வலுப்பெற்று மொத்தம் 28 கட்சிகளாக இணைந்து விட்டன. அதை விட முக்கியமாக நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 400 தொகுதிகளில் பா.ஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரே ஒரு வேட்பாளரை நிறுத்துவது என்று முடிவு எடுத்துவிட்டார்கள். மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தொகுதி பங்கீடு முடிக்கவும் முடிவு செய்துள்ள இந்தியா கூட்டணி இதுதொடர்பான குழுக்களை நியமித்து இந்த மாத இறுதிக்குள் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் மீண்டும் கூடி ஆலோசிக்க முடிவு எடுத்த தகவல்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ அரசை அதிர்ச்சி அடைய வைத்து விட்டன.

எதிர்க்கட்சிகள் வலுப்பெற்றால் அவர்களை அந்தந்த மாநிலங்களில் எதிர்கொள்வது கடினம் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை சீர்குலைக்க எடுத்த ஆயுதம் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இந்த பணி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜூன் 2ம் தேதி அமித்ஷா மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து இதுபற்றி பேசினார்கள். மேலும் இந்தப்பணியை உடனே தொடங்கவும் அவர்கள் அறிவுறுத்தினர். அதை தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் பணிகள் வேகம் பிடித்தன.

வழக்கமாக ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் அதிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். முக்கிய பதவியில் வகிப்பவர்களும் அவர்களை வந்து அடிக்கடி சந்திக்க மாட்டார்கள். ஆனால் அமித்ஷா வந்து சந்தித்து விட்டு சென்ற பிறகு ராம்நாத் கோவிந்த் படுவேகமாக செயல்பட ஆரம்பித்தார். ஜூன் 9 முதல் ஆக.29 வரை மட்டும் அவர் 10 மாநிலங்களில் கவர்னர்களை சந்தித்து பேசினார். ஒன்று அந்த மாநிலங்களுக்கு ராம்நாத் கோவிந்த் சென்று சந்தித்தார். இல்லை என்றால் அவர்கள் டெல்லி வந்து ராம்நாத் கோவிந்த்தை சந்தித்தார்கள்.

சில கவர்னர்கள் கூடுதலாக ஓரிரு முறை ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த பட்டியலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தலைமை நீதிபதி சந்திரசூட், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும் உண்டு என்பதுதான் கூடுதல் தகவல். இதை தொடர்ந்து அனைத்து ஏற்பாடுகளும் முடிந்த பிறகு தான் செப்.18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

* ஏன் ராம்நாத் கோவிந்த்?
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் மோடி ஏன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை தேர்வு செய்தார் என்பது பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கலாம். ஆனால் உபி மாநிலத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அதோடு முக்கியமாக பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரியவர். மோடியின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படக்கூடியவர் என்பதால் ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன.

* ‘இந்தியா’ உடைக்க மெகா பிளான்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியா கூட்டணியை உடைக்கும் மெகா பிளான் என்கிறார்கள் விஷயம் அறிந்த பா.ஜ தலைவர்கள். நாடாளுமன்ற தேர்தலுடன், மக்களவை தேர்தலும் நடத்தப்பட்டால் மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரசுக்கும், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே பிரச்னை வரும். அதே போல் டெல்லி, பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம்ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பிளவு ஏற்படும். அவர்கள் ஒருங்கிணைந்து சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது. இது பா.ஜவுக்கு சாதகமாக மாறிவிடும் என்று பிரதமர் மோடி நம்புவதாகவும் அதற்காகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் விஷயம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

* ராம்நாத்தின் அதிரடி சந்திப்புகள்…
ராம்நாத் கோவிந்த் ஜூன் 9 முதல் ஆக.29 வரை பல முக்கிய பிரமுகர்களை சந்தித்த விவரம்:
ஜூன் 2 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா.
ஜூன் 9 பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா.
ஜூன் 10 பா.ஜ மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி.
ஜூன் 23 உபி கவர்னர் ஆனந்திபென் பட்டேல், முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஜூன் 26 ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ்.
ஜூலை 7 தத்ரா நாகர் ஹவேலி நிர்வாகி பிரபுல் கே பட்டேல்.
ஜூலை 16 உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா.
ஜூலை 17 கவர்னர்கள் கணேஷி லால் (ஒடிசா), ராஜேந்திரா அக்லேக்கர் (பீகார்), ஆனந்த போஸ் (மே.வங்கம்)
ஜூலை 19 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.
ஜூலை 23 மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா.
ஆக.1 அமித்ஷா மீண்டும் சந்திப்பு
ஆக.5 மேற்குவங்க கவர்னருடன் மீண்டும் சந்திப்பு
ஆக.10 உத்தரகாண்ட் கவர்னர் குர்மித்சிங்.
ஆக.11 குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத்.
ஆக.19 கேரள கவர்னர் ஆரிப் முகமது கான்.
ஆக.25 உபி கவர்னர் ஆனந்திபென் பட்டேல் மீண்டும் சந்திப்பு
ஆக.29 ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

* 2024ல் லட்சியம்; 2029ல் நிச்சயம்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த முடியாது என்கிறார்கள் அரசியல்சட்ட வல்லுநர்கள். இந்த ஆண்டு இறுதியில் மிசோரம், சட்டீஸ்கர், மபி், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு இறுதியில் அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்டிலும் சட்டசபை பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இந்த 12 மாநிலங்களையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஒன்றாக தேர்தல் நடத்திவிடலாம். ஆனால் 2025 பிப்ரவரியில் டெல்லி, 2025 நவம்பரில் பீகார் சட்டசபைகளின் பதவிக்காலம் முடிகிறது. அதே போல் 2026 மே மாதம் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடிவுகிறது.

இந்த 7 மாநிலங்களின் பதவிக்காலத்தை சுருக்கினால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், டெல்லி, பீகார் ஆகிய 5 எதிர்க்கட்சி மாநிலங்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் என்பதால் இந்த 5 மாநிலங்களின் பதவிக்காலத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் 2029ம் ஆண்டு வரை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. அதே போல் 2027 மார்ச் மாதம் பதவிக்காலம் முடியும் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் 2027 மே மாதம் பதவிக்காலம் முடியும் உபியிலும், 2027 டிசம்பரில் பதவிக்காலம் முடியும் குஜராத், இமாச்சல் மற்றும் 2028 மார்ச் மாதம் பதவிக்காலம் முடியும் மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களிலும், 2028 மே மாதம் பதவிக்காலம் முடியும் கர்நாடகா பேரவை பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து 2029ல் மக்களவை தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படலாம்.

The post இமாச்சல், கர்நாடகா தோல்வியால் அதிர்ந்து போன பா.ஜ: ஒரே நாடு, ஒரே தேர்தல் பணிகளை ஜூனில் தொடங்கிய ஒன்றிய அரசு; பரபரப்பான பின்னணி தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Himachal ,Karnataka ,Union government ,Amit Shah ,Modi ,India ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் சோமண்ணாவுக்கு...