×

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை எதிர்த்து ஒன்றிய அமைச்சர் முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜ செயலாளர் சீனிவாசன், தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து, கடந்த 2019ல் வேலூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசியதாக, தமிழக பா.ஜ.வின் அப்போதைய தலைவர் எல்.முருகன் மீது முரசொலி அறக்கட்டளை தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், முரசொலி அறக்கட்டளையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மனுதாரர் பேசியுள்ளார் என்று குற்றச்சாட்டு கூறி ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு மனுதாரர் சிறப்பு நீதிமன்றத்தில்தான் எதிர்கொள்ள வேண்டும். வழக்கில் இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை எதிர்த்து ஒன்றிய அமைச்சர் முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி: 3 மாதங்களில் விசாரணையை முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Murugan ,Murasoli Trust ,CHENNAI ,Murasoli Foundation ,Panchami ,
× RELATED கோவை, நீலகிரி மட்டுமல்ல… தமிழகம்...