×

அமைச்சர் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் பாராட்டு

சென்னை: எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வருகின்றன ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை உள்பட அனைத்து பள்ளி சார்ந்த பணிகள், கல்வி சார்ந்த பணிகளை தினமும் சென்னையில் உள்ள எமிஸ் என்கிற கணினி தகவல் மையத்துக்கு விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கடந்த ஆட்சியில் அறிவித்தது.

அதன்படி தினமும் ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கும் பணிக்கிடையில் கணினி தகவல் மையத்துக்கு விவரங்களை அனுப்பும் பணிகளை செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் தாங்கள் வைத்துள்ள செல்போன் மூலம் தினமும் இந்த பணியை செய்வதால் கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவித்து வருகின்றனர். இந்த பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியை சந்தித்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன், எமிஸ் பதிவு பணிகள் உள்ளிட்ட இதர பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று மாலையில் கலைவாணர் அரங்கில் விருது வழங்கிப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி, எமிஸ் என்னும் கணினி தகவல் மையத்துக்கு தகவல்களை பதிவு செய்யும் பணியில் இருந்து ஆசிரியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும், 5 கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாகவும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அனைத்து ஆசிரியர்களும் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், கோரிக்கை வைத்த சில மணி நேரங்களில் அறிவித்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்தும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பல்வேறு ஆசிரியர் சங்கங்களும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளன.

The post அமைச்சர் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Teacher's Progress Association ,Minister of School Education ,EMIS ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக...