×

மக்கள் பயன்பாட்டிற்கு வரும் தமிழ்நாடு சுற்றுலா திட்டங்கள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை : சென்னை, வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில், சுற்றுலாத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: பழம்பெருமை வாய்ந்த துறைமுக நகரான பூம்புகார் (காவிரிபூம்பட்டினம் பழைய பெயர்) நகரத்தில் பூம்புகார் கலைக்கூடத்தில் புனரமைப்பு பணிகள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒகனேனக்கல், பிச்சாவரம் ஆகிய சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரித்ரா நதி தெப்பக்குளம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெரிய ஏரி ஆகிய இடங்களில் படகு குழாம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முட்டுக்காடு படகு குழாமில் 200 நபர்கள் அமரும் வகையிலான இரண்டு அடுக்குகள் கொண்ட மிதவை உணவக கப்பல் அமைக்கும் பணியில் அடிப்படை கட்டமைப்பு பணி முடிவடைந்து, உணவகம் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகின்றது. அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப்பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மக்கள் பயன்பாட்டிற்கு வரும் தமிழ்நாடு சுற்றுலா திட்டங்கள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ramachandran ,Chennai ,Walaja Road, Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் புயல் பாதிப்பு பெரிய...