×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு மாதம் சிறப்பு கண்காட்சி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார். எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் அரசு அருங்காட்சியகங்கள் துறை சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘கலைஞருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் மற்றும் கலைஞர் வழக்கொழித்த கை ரிக்ஷா’ குறித்த சிறப்பு கண்காட்சியை பொதுமக்கள் பார்வைக்காக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று திறந்து வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி எழும்பூர் அருங்காட்சியகத்தில் துவக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலைஞர் அரசியல் வாழ்க்கை பயணம், திரையுலக வாழ்க்கை, பத்திரிகையாளர் வாழ்க்கை என பன்முக தன்மை கொண்ட வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள “கை ரிக்ஷா” இந்திய தேசத்தில் இன்னும் சில மாநிலங்களில் உள்ளது.

மனிதனே மனிதனை அமர வைத்து கைகளால் இழித்து செல்லும் கை ரிக்ஷாவை ஒழிக்க வேண்டும் என முதல்வராக இருந்த கலைஞர் திட்டம் கொண்டு வந்த பிறகு தான் ஆட்டோ ரிக்ஷாக்கள் நடைமுறைக்கு வந்தது. இக்கண்காட்சியில் இதனை அரிய காட்சியாக அமைத்து இளைஞர் சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை திட்டம், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் போன்ற பல்வேறு அற்புதமான திட்டங்களை ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பயன்படக்கூடிய வகையில் எதிர்கால சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் அரவிந்த், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒரு மாதம் சிறப்பு கண்காட்சி: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Egmore Museum ,Minister MU ,Saminathan ,Chennai ,Minister ,M. P. Saminathan ,
× RELATED டெல்லியில் 42வது இந்திய பன்னாட்டு...