×

சென்னையில் போக்குவரத்து விதிமீறிய 12,300 பேரின் லைசென்ஸ் முடக்கம்: 6 மாதம் வாகனம் ஓட்ட முடியாது

சென்னை: சென்னை மாநகர சாலைகளில் சிக்னலை மீறிச் செல்பவர்கள், சிக்னலில் உள்ள நிறுத்தக் கோட்டை (ஸ்டாப் லைன்) தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்கள், மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள், செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள் என போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கும் போலீசார், மீண்டும், மீண்டும் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து வருகிறார்கள். இதை மீறி போக்குவரத்து விதிமீறல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோரின் லைசென்சை முடக்கி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து லைசென்சை முடக்கி வைக்க பரிந்துரை செய்து வருகிறார்கள். அதன்பேரில், கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரையில் 12,300 பேரின் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ளது. இப்படி முடக்கி வைக்கப்படும் லைசென்ஸ்கள் 3 முதல் 6 மாதங்கள் வரையில் செயல்படாதவை என்கிற அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த கால கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் வாகனங்களை இயக்க முடியாது. இதை மீறி லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 18 மாதங்களில் மட்டும் 4,846 லைசென்ஸ்கள் முடக்கி வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சிக்னலை மீறி சென்றது தொடர்பாக கடந்த ஆண்டு 3500 பேரின் லைசென்ஸ் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் 1362 பேரின் லைசென்சை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். வேகமாக வாகனங்களை ஓட்டிய 2384 பேரின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு 1500 பேரும், இந்த ஆண்டு இதுவரை 550 பேரும் சிக்கியுள்ளனர். அதிகபாரங்களை ஏற்றிச் சென்றதற்காக 1500 வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமம் 6 மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 1130 பேரின் லைசென்சும், போதையில் வாகனம் ஓட்டிய 1400 பேரின் லைசென்சும் முடக்கப்பட்டிருக்கிறது.

* கேமரா மூலம் வழக்குப்பதிவு
சென்னை மாநகரில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது போலீசார் நேரடியாக வழக்கு பதிவு செய்து வரும் நிலையில் கேமராக்கள் மூலமும் கண்காணித்து போலீசார் வழக்கு பதிந்து வருகிறார்கள். அதேநேரத்தில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் நம்பர் பிளேட்டை செல்போனில் படம் பிடித்தும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

The post சென்னையில் போக்குவரத்து விதிமீறிய 12,300 பேரின் லைசென்ஸ் முடக்கம்: 6 மாதம் வாகனம் ஓட்ட முடியாது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…